கோவா மாநிலத்தில்
திரினமூல் காங்கிரஸ்
கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி, வாக்கு எண்ணிக்கை முழுசாகக் கூட முடியாத நிலையில் அப்படியே யு டர்ன் போட்டு பாஜகவுக்கு ஓடி விட்டது.
அரசியல் என்றாலே சுயநலம்தான். அதிலும் தேர்தல் அரசியல் என்று வந்து விட்டால், நமக்கு என்ன லாபம் என்று மட்டும்தான் கட்சிகள் பார்க்கும் என்பதை கோவா தேர்தல் நிரூபித்துள்ளது.
கோவா மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் அணிகள் தவிர திரினமூல் காங்கிரஸ் ஒரு தனி அணியாக போட்டியிட்டது. அதேபோல ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிட்டது. திரினமூல் காங்கிரஸ் தனது கூட்டணியில் மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியை இணைத்துக் கொண்டு போட்டியிட்டது.
வாழ்ந்து கெட்டவர்கள் என்று சொல்வார்களே அது மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சிக்குப் பொருந்தும். ஒரு காலத்தில் கோவாவில் பெரிய ஆளாக வலம் வந்த கட்சி இது. இப்போது திரினமூலுடன் கூட்டணி வைக்கும் நிலைக்கு அது போனது. ஆனால் அந்தக் கட்சியின் கணக்கே வேறாக இருந்தது. தனியாக நின்றால் நிச்சயம் சிரமம் என்பதால்தான் அது கூட்டணிக்கு முடிவு செய்தது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தேவைக்கேற்ற இடத்துக்குத் தாவுவதுதான் அதன் திட்டமாக இருந்துள்ளது.
நேற்று இரவு அதை அக்கட்சி நிரூபித்து விட்டது. இந்தக் கட்சிக்கு கோவா சட்டசபைத் தேர்தலில் 2 இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது. அதேசமயம் திரினமூல் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவி விட்டது. 2 சீட்டுகளை வென்ற கையோடு தனது ஆதரவை பாஜக வுக்குத் தெரிவித்து விட்டது மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி. இதன் மூலம் திரினமூல் காங்கிரஸ் கட்சியுடனான அதன் உறவு முடிவுக்கு வந்து விட்டது.
மமதாவைப் பொறுத்தவரை நிறைய திட்டமிட்டு கோவாவில் களம் இறங்கியிருந்தார். எப்படியும் கணிசமான இடங்களைக் கைப்பற்றி விடுவோம். காங்கிரஸ் நம்மிடம் ஆதரவு கேட்கும். அதை வைத்து நமது காரியங்களை சாதித்துக் கொள்ளலாம் என்பது அவரது திட்டமாக இருந்தது. மேலும் கோவாவில் ஆரம்பித்து தேசிய அளவிலான தனது கூட்டணி திட்டங்களையும் நிறைவேற்றிக் கொள்ளவும் அவர் காத்திருந்தார். ஆனால் எல்லாமே காலியாகி விட்டது. அதை விட முக்கியமாக அவரிடமிருந்து படு வேகமாக தாவி ஓடி விட்டது மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி.
பாஜக இந்தத் தேர்தலில் 20 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 21 இடங்கள் தேவை. ஆனால் 3 சுயேச்சைகள் ஆதரவையும் பாஜக பெற்றதால் அதன் பலம் 23 ஆக உயர்ந்தது. கூடவே மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியும் ஆதரவு தெரிவித்ததால் அதன் பலம் 25 ஆக உயர்ந்து விட்டது. இதனால் அடுத்த ஐந்து ஆண்டுகளை தெம்பாக கடக்கக் கூடிய வாய்ப்பை பாஜக பெற்றுள்ளது.
கோவா தேர்தலுக்குப் பிறகு திரினமூல் கட்சியும், ஆம் ஆத்மியும் கிங்மேக்கர்களாக வலம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சிக்குத்தான் அந்த டைட்டில் போயுள்ளது. அதேசமயம், அந்தக் கட்சியின் ஆதரவு இல்லாமலும் கூட பாஜகவால் ஆட்சியமைக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.