அகமதாபாத்:
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு சென்றார். அகமதாபாத்தில், பஞ்சாயத்து அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்ற பொது கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்
குஜராத் மாநிலம் மகாத்மா காந்தி மற்றும் சர்தார் வல்லபாய் படேலின் பூமி என பிரதமர் குறிப்பிட்டார். தற்போது நாம் சுதந்திரப் பெருவிழாவை கொண்டாடி வரும் வேளையில், கிராமப்புற வளர்ச்சி என்ற காந்தியின் கனவை நனவாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தபட்சம் 75 விவசாயிகள், இயற்கை விவசாயத்தை பின்பற்றுபவராக இருக்க வேண்டும். ரசாயன உரங்களால் ஏற்படும் நச்சு பாதிப்பிலிருந்து பூமித்தாயை விடுவிக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.
நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க 75 பண்ணைக் குட்டைகளை அமைக்குமாறும் பிரதமர் குறிப்பிட்டார்.
பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களில் ஒருவராவது தினந்தோறும் ஒரு முறையாவது உள்ளூர் பள்ளிக் கூடத்திற்கு சென்று முழுமையாக கண்காணிப்பதுடன், பள்ளியின் கல்வித்தரம் மற்றும் தூய்மையைப் பராமரிக்க நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் அறிவுறுத்தினார்.
மாணவர்கள் யாரும் பள்ளிப்படிப்பை கைவிடாமலிருப்பதையும், குழந்தைகளின் தகுதிக்கு ஏற்ப அவர்கள் பள்ளிக்கூடம் அல்லது அங்கன்வாடி மையங்களில் சேர்க்கப்படுவதை உறுதி செய்யுமாறும் பஞ்சாயத்து உறுப்பினர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
இதனை தொடர்ந்து, காந்தி நகரில் உள்ள தனது தாயார் ஹிராமென் மோடியின் வீட்டிற்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு தனது தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி பின்னர் அங்கு இரவு உணவு அருந்தினார்.