பெங்களூரு-ஒன்பது ஆண்டுகளுக்கு முன், கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி மீது பதிவான கிரிமினல் வழக்கை கர்நாடக உயர்நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது.கர்நாடக சட்டசபை தேர்தலை ஒட்டி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவியும், உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான மாயாவதி, 2013 ஏப்ரல் 30ல் கலபுரகி மாவட்டம், ஜேவர்கியில் பிரசாரம் செய்ய வந்தார்.அவரது வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் பரிசோதித்த போது, 1.50 லட்சம் ரூபாய் இருந்தது. அந்த பணம் குறித்த விபரத்தை தேர்தல் அதிகாரிகள் கேட்ட போது, ‘5-0 ஆயிரம் ரூபாய் என்னுடையது. ஒரு லட்சம் ரூபாய் கட்சியின் பொது செயலர் சதீஷ் சந்திர மிஸ்ரா உடையது’ என்றார்.மாயாவதியின் விளக்கத்தை தேர்தல் ஆணையம் ஏற்றது. ஆனால், ஜேவர்கி போலீஸ் நிலையத்தில் தேர்தல் விதிமுறை மீறியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பெங்களூரு நகரின் 45வது ஏ.சி.எம்.எம்., நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், தங்கள் விளக்கத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுகொண்டதால், கிரிமினல் வழக்கை ரத்து செய்யும்படி, மாயாவதியும், சதீஷ் மிஸ்ராவும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இவ்வழக்கு, நீதிபதி சுனில் தத் யாதவ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக மனுதாரர் அளித்த விளக்கத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுகொண்டுள்ளது. எனவே, இனியும் அந்த வழக்கு விசாரணை நடப்பது சரியில்லை’ என்று கூறி, கிரிமினல் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.இதனால், ஒன்பது ஆண்டுகளுக்கு பின் மாயாவதிக்கு கிரிமினல் வழக்கிலிருந்து நிம்மதி கிடைத்துள்ளது.
Advertisement