சென்னை: அமமுகவின் 5-ம் ஆண்டு தொடக்க விழா மார்ச் 15-ம் தேதி நடைபெறவுள்ளதாகவும், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கட்சிக் கொடியினை ஏற்றயிருப்பதாகவும், அமமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழக மக்களின் பாதுகாப்பு அரணாக, எதற்கும் அஞ்சாத இரும்புப் பெண்மணியாக, ஏழை – எளிய மக்களின் நலம் காத்த ஏந்தலாக திகழ்ந்த ஜெயலலிதாவின் திருவுருவத்தை கொடியில் தாங்கியும், கொள்கைகளை நெஞ்சில் ஏந்தியும் பீடுநடை போட்டு வரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 5-ம் ஆண்டு தொடக்க விழா வரும் 15.03.2022 செவ்வாய்க்கிழமை அன்று கொண்டாடப்படவிருக்கிறது.
இதையொட்டி அன்றைய தினம் காலை 10.30 மணியளவில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழக அலுவலக வளாகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கட்சிக் கொடியினை ஏற்றிவைத்து தொண்டர்களோடு தொடக்கவிழா கொண்டாட்டத்தில் பங்கேற்கவிருக்கிறார்கள்.
இந்நிகழ்வில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறரா்கள்.
ஜெயலலிதாவின் மக்கள் நலக் கொள்கைகளை வாழ வைத்திடவும், தமிழகத்தின் நலன்களைக் காத்து நின்றிடவும் நம்முடைய லட்சியப்பயணத்தை தொடர்ந்திடுவோம்” என்று கூறப்பட்டுள்ளது.