மீட்பு மன்னர் மோடி!| Dinamalar

பேரிடர் நேரத்தில், ஒரு நாடு எப்படி செயல்படுகிறது என்பதை வைத்து, அதன் திறனை மதிப்பிட்டு விடலாம். உக்ரைன் — -ரஷ்யா இடையே போர் நடக்கும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் முயற்சியில், இந்தியா செயல்பட்டு வரும் விதத்தை பார்த்து வல்லரசு நாடுகளே வியக்கின்றன.’ஆப்பரேஷன் கங்கா’ வாயிலாக, ஆயிரக்கணக்கான இந்தியர்களை மத்திய அரசு மீட்டுள்ள நிலையில்; உக்ரைனில் சிக்கிய 6,000 சீன மக்களை மீட்க, கடந்த மார்ச் 5ம் தேதி தான் முதல் விமானத்தை சீனா அனுப்பியது. கடந்த 2015ல் தொடங்கி தற்போது வரை ஐந்து மீட்பு நடவடிக்கைகளை, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தி உள்ளது.அவற்றின் வாயிலாக பல லட்சம் இந்தியர்களின் உயிர் காக்கப்பட்டுள்ளது.

*ஆப்பரேஷன் ராஹத் – 2015

அரபு நாடுகளில் மிகவும் வறுமையில்உள்ள நாடு ஏமன். 2015ல் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், அன்னாட்டு அரசை கைப்பற்றினர். அவர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையில் அரபு கூட்டணி, விமான தாக்குதல் நடத்த துவங்கியது.ஏமனில் இருந்து இந்தியர்கள் வெளியேறும்படி, வெளியுறவு அமைச்சகம் பல முறை அறிவுறுத்தியது. இருப்பினும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் செவிசாய்க்காமல், இறுதியில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க ‘ஆப்பரேஷன் ராஹத்’ செயல்படுத்தப்பட்டது. அதன் வாயிலாக 4,640 இந்தியர்கள் மீட்கப்பட்டனர்.
பல நாடுகள், தங்களால் ஏமனை நெருங்க முடியவில்லை என்று கூறி, இந்தியாவின் உதவியை நாடின. அதற்கேற்ப 41 நாடுகளை சேர்ந்த 960 பேரை இந்திய அரசு மீட்டது.

*ஆப்பரேஷன் மைத்ரி – 2015

கடந்த 2015, ஏப்ரல் 25 அன்று நேபாளத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில், 8,964 பேர் உயிரிழந்தனர்; 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். நிலநடுக்கம் நிகழ்ந்த 15 நிமிடங்களில் இந்திய அரசு செயலில் இறங்கியது. ‘ஆப்பரேஷன் மைத்ரி’யில், சிக்கியவர்களை சாலை வழியாக மீட்க 35 பேருந்துகள் அனுப்பப்பட்டன. விமான படையின் 12 விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. இதன் வாயிலாக 1,935 இந்தியர்கள் மீட்கப்பட்டனர்.
ஏமனில் நடந்ததை போல, வெளிநாட்டவரும் மீட்கப்பட்டனர்.

* வந்தே பாரத் மிஷன் – 2020

கொரோனா பெருந்தொற்று காலத்தில், பல்வேறு நாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்கும் திட்டத்துக்கு, ‘வந்தே பாரத் மிஷன்’ என பெயரிடப்பட்டது. இதுவரை வரலாற்றில் இல்லாத, ஒருங்கிணைந்த, மிகப்பெரிய மீட்பு திட்டம் இது என கூறப்படுகிறது. கடந்த 2020, மே 7 அன்று துவங்கிய திட்டம் 10 கட்டங்களாக செயல்படுத்தப்பட்டது. வந்தே பாரத் மிஷனின் ஏழாம் கட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியா, பஹ்ரைன், கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட 19 நாடுகளுக்கு விமானங்களை இயக்கி, 67 லட்சம் பேரை மத்திய அரசு மீட்டுள்ளது.

*ஆப்பரேஷன் தேவி சக்தி – 2021

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து, அந்த நாடு, தலிபான் வசமானது. தலைநகரான காபூலில் பாதுகாப்பு நிலை மோசமானது. அனைத்து நாடுகளும் தங்கள் குடிமக்களை மீட்க சிரமப்பட்ட நேரத்தில். ‘ஆப்பரேஷன் தேவி சக்தி’ வாயிலாக 800க்கும் மேற்பட்ட இந்தியர்களை மத்திய அரசு வெற்றிகரமாக மீட்டது.

*ஆப்பரேஷன் கங்கா – 2022

ரஷ்யா- – உக்ரைன் போர் காரணமாக உக்ரைனின் வான்பகுதி மூடப்பட்டது. இதனால், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் குறிப்பாக மாணவர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு உக்ரைன் அதிபரிடம் பிரதமர் மோடி, கடந்த பிப்ரவரி 26 அன்று தொலைபேசியில் தெரிவித்தார். தொடர்ந்து அடுத்த நாளே, ‘ஆப்பரேஷன் கங்கா’ செயல்படுத்தப்பட்டு, முதல் கட்டமாக 249 பேர் மீட்கப்பட்டனர். பிப்., 28ம் தேதி, மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜு, வி.கே.சிங், உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி, போலந்து, ஸ்லோவாகியா சென்று பணியை துரிதப்படுத்தினர். தரை வழியாக அந்த நாடுகளுக்கு இந்தியர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கிருந்து விமானம் வழியாக இந்தியாவிற்கு மீட்டு
வரப்பட்டனர். இதற்காக, அந்த நாடுகளின் எல்லைகளில் இந்திய துாதரகங்கள் சார்பில் சோதனை முகாம்கள் அமைக்கப்பட்டன. இதன் வாயிலாக 16 ஆயிரம் இந்தியர்கள் இதுவரை மீட்கப்பட்டு உள்ளனர். தற்போதும் மீட்பு பணி தொடர்கிறது. வெளியுறவுக் கொள்கையில் பிரதமர் மோடியின் அசாத்திய திட்டமிடலும், தொலைநோக்கு பார்வையும் தான் இன்று வளர்ந்த நாடுகளே இந்தியாவை பார்த்து ஆச்சரியமடையும் நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.
– எஸ்.ஜி.சூர்யா செய்தி தொடர்பாளர், தமிழக பா.ஜ.,

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.