மீண்டும் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து – விமானி உயிரிழப்பு, துணை விமானிக்கு சிகிச்சை

ஜம்மு காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், விமானி ஒருவர் உயிரிழந்துள்ளார். 29 வயதான மற்றொரு விமானி படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
காஷ்மீரில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படை வீரரை மீட்பதற்காக, இந்தியா ராணுவத்துக்கு சொந்தமான சீட்டா வகை ஹெலிகாப்டர் சென்றது. வடக்கு காஷ்மீரில் பந்திப்போரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே, குரேஷ் செக்டார் பகுதியில் தரையிறங்கும் நேரத்தில், மோசமான வானிலை காரணமாக ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
தகவல் அறிந்த மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விமானிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், விமானி உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த துணை விமானி மீட்கப்பட்டு ஸ்ரீநகரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 29 வயதான வாஜ் சங்கல்ப் யாதவ் அந்த துணை விமானி, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக இராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
image
ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு நடைபெற்று இருப்பதாக ராணுவ தர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான மற்றும் விமானப் படைக்கு சொந்தமான விமானங்கள், ஹெலிகாப்டர்கள் விபத்தில் சிக்கியுள்ளன. இதில், 30 பேர் வரை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர், கடந்த ஆண்டு நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 12 ராணுவ அதிகாரிகளும் உயிரிழந்தனர். இந்த ஹெலிகாப்டர் விபத்து சம்பவம் நாட்டையே உலுக்கியது. அதற்குள் மீண்டும் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.