சென்னை துரைப்பாக்கதில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் தனக்கு ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயக்குமார் மனுதாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி போலீஸ் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 11-ந்தேதிக்கு (இன்று) தள்ளி வைத்தார்.
இதையடுத்து இன்று ஜெயக்குமார் ஜாமின் மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கினார்.
திருச்சியில் 2 வாரங்கள் தங்கியிருந்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் திருச்சியில் இருந்து வந்த பின் வாரந்தோறும் திங்கட்கிழமை விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் எனவும் ஜெயக்குமாருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஏற்கனவே 2 வழக்குகளில் ஜாமின் பெற்றுள்ள நிலையில் இன்று 3-வது வழக்கில் ஜாமின் பெற்றுள்ளதால் இன்று அவர் சிறையில் இருந்து வெளியே வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை புழல் சிறையில் இருந்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் இன்று விடுதலை ஆகவில்லை என்று சிறைத்துறை தெரிவித்துள்ளது.
சிறைத்துறை விதிகளின்படி மாலை 6 மணிக்கு மேல் ஜாமின் கோரி வரும் விண்ணப்பம் ஏற்கப்படுவதில்லை என்றும் அதனால் ஜெயக்குமார் இன்று விடுதலை இல்லை என்றும் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், ஜெயக்குமார் நளை சிறையில் இருந்து வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்..
காங்கிரஸ் விரும்பினால் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைவரும் இணையலாம்- மம்தா அழைப்பு