புதுடெல்லி,
நேட்டோவில் சேர எதிர்ப்பு தெரிவித்து உக்ரைனுக்கு எதிராக ரஷியா மேற்கொண்டு வரும் போரானது தொடர்ந்து 16வது நாளாக இன்று நீடித்து வருகிறது. போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து கூறி வருகின்றன. ஐ.நா. அமைப்பு மற்றும் போப் பிரான்சிஸ் உள்ளிட்டோர் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
போரால், இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். போரை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து பாதுகாப்பு தேடி வெளியேறி வருகின்றனர். அவர்களை அந்தந்த நாடுகள் சிறப்பு விமானம் உதவியுடன் மீட்டு வருகின்றன.
ரஷிய போர் எதிரொலியாக உக்ரைனில் சிக்கி தவித்த 242 இந்தியர்களை போலந்தில் இருந்து ஏற்றி கொண்டு சிறப்பு விமானம் இன்று காலை டெல்லி வந்தடைந்து உள்ளது. அந்த விமானத்தில் வந்தவர்களில், சுமி நகரில் சிக்கி மீட்கப்பட்ட பிரேமா என்ற மாணவி கூறும்போது, நாங்கள் கடைசியாக வெளியேறியவர்கள். போர்நிறுத்தம் பற்றிய அறிவிப்பு வெளிவந்த பின்னரே நாங்கள் வெளியே வர முடிந்தது.
அதற்கு முன்பு வரை குண்டு சத்தம், பீரங்கி தாக்குதல் சத்தங்கள் கேட்டு கொண்டே இருந்தன. எனினும், இந்திய தூதரகம் மீது எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. அரசு, எங்களை முறையாக வெளியேற உதவி செய்தது. நேரடி பேருந்துகள் மற்றும் ரெயில் சேவைகளையும் வழங்கியது என கூறியுள்ளார்.