புதுடெல்லி: ரஷ்யாவில் பயிலும் இந்திய மாணவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏதுவும் காணப்படவில்லை என்றும், அதேவேளையில் அவர்கள் விரும்பினால் தாயகம் திரும்பலாம் என்றும் ரஷ்யாவிலுள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
தனது அண்டை நாடான உக்ரைன் மீது ரஷ்யா சிறப்பு ராணுவ நடவடிகை என்ற பெயரில் போர்த் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதல் 16-வது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது. இந்தத் தாக்குதலைக் கண்டித்து சர்வதேச நாடுகள் பலவும் ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளன. இது அங்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அங்கு வங்கி மற்றும் விமான சேவைகள் சீர்குலைந்து வருவது குறித்து மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் ரஷ்ய பல்கழைக்கழங்களில் தங்கிப் படிக்கும் இந்திய மாணவர்களுக்கான வழிகாட்டுதல்களை தூதரகம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில், “ரஷ்யாவிலிருந்து வெளியேறுவதற்கு பாதுகாப்பு காரணங்கள் ஏதும் இல்லை என்றாலும், நாடு திரும்புவது பற்றி மாணவர்கள் பரிசீலனை செய்யலாம்.
ரஷ்யாவில் வங்கி செயல்பாடுகளில் சில இடர்பாடுகள் இருந்தாலும், ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் நேரடி விமான சேவைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தக் காரணங்களுக்காக மாணவர்கள் நாடு திரும்ப விரும்பினால், அவர்கள் அதனை பரிசீலிக்கலாம். இந்திய மாணவர்கள் ரஷ்யாவை விட்டு வெளியேற பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை. இந்திய குடிமக்கள் மற்றும் மாணவர்கள் பாதுகாப்பு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தூதரகம் தொடர்பில் இருந்து வருகிறது.
ரஷ்யாவின் பல்கலைக்கழகங்கள் ஏற்கெனவே இணைய வழி தொலைதூரக் கல்விக்கு மாறிவிட்டன. மாணவர்கள் தங்களின் படிப்பிற்கு இடையூறு ஏற்படாமல் தொடர்வது குறித்து உரிய பல்கலைக்கழங்களுடன் ஆலோசித்து தங்களின் விருப்பப்படி நடந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் சுமார் 15,000 இந்திய மாணவர்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலனவர்கள் மருத்துவ மாணவர்கள். மேற்கத்திய நாடுகளைவிட குறைவான கட்டணத்தில் படிக்க முடியும் என்பதால், வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களின் தேர்வில் ரஷ்யா முக்கியமாக இருந்து வருகிறது.