அமராவதி:
ஆந்திர மாநில சட்டசபையில் இன்று ரூ.2.56 லட்சம் கோடியில் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் புக்கனா ராஜேந்திரநாத் தாக்கல் செய்தார். அரசாங்கம் ரூ.55,000 கோடி கடன் வாங்க உத்தேசத்துள்ள நிலையில், 2022-23ல் நிதிப் பற்றாக்குறை ரூ.48,724 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 17,036 கோடி வருவாய் பற்றாக்குறை இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 2022-23 ஆம் ஆண்டில் மாநிலத்தின் மொத்த பொதுக் கடன் 4,39,394.35 கோடி ரூபாயாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, கடந்த டிசம்பர் 31ம் தேதி வரை பல்வேறு அரசு நிறுவனங்களால் கடனாகப் பெறப்பட்ட ரூ.1,17,503 கோடிக்கு அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. அடுத்த நிதியாண்டில் கடன் சேவைக்காக ரூ.21,805 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இலவசத் திட்டங்களுக்காக பட்ஜெட்டில் ரூ.48,802 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது நடப்பு ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதியைவிட ரூ.800 கோடி அதிகமாகும். திருத்தப்பட்ட மதிப்பீடுகளில், 2021-22 இல் இலவசத் திட்டங்களுக்கான செலவு ரூ.39,615 கோடியாகக் காட்டப்பட்டுள்ளது.
அடுத்த 2 ஆண்டுகளில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.2 கோடி என்ற வகையில் ரூ.350 கோடி சிறப்பு மேம்பாட்டுத் தொகுப்பு நிதியை உருவாக்க பட்ஜெட்டில் அரசு முன்மொழிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரதான எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்கள் பட்ஜெட் தாக்கலின்போது தொடர்ந்து குறுக்கீடு செய்தனர். இது முற்றிலும் பொய்யான பட்ஜெட் என குற்றம் சாட்டினர்.
இதையும் படியுங்கள்… ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை சேர்க்க வேண்டும்- லிதுவேனியா அதிபர் வலியுறுத்தல்