"வண்டியை குஜராத்துக்கு விடு".. கலக்கலான ரோட்ஷோ.. அசத்திய நரேந்திர மோடி!

உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் ஆட்சியை தக்க வைத்த குஷியில் உள்ள
பிரதமர் நரேந்திர மோடி
அதே சூட்டோடு இன்று குஜராத்துக்குப் போயுள்ளார். அங்கு அவர் நடத்திய ரோட்ஷோவில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பளித்தனர்.

5 மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தலில்
பாஜக
அமோக வெற்றியைப் பெற்றது. உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு எதிர்ப்பலைகளையும் மீறி பாஜக ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. அதேபோல கோவா, உத்தரகாண்ட், மணிப்பூரிலும் மீண்டும் ஆட்சியமைக்கிறது. பஞ்சாப் அக்கட்சிக்கு பெரிய எதிர்பார்ப்பை கொடுக்கவில்லை என்பதால் அங்கு அக்கட்சியின் தோல்வி பாஜகவைப் பாதிக்கவில்லை.

பாஜகவுக்குக் கிடைத்த இந்த பெரும் வெற்றியை அக்கட்சியினர் நேற்று முழுவதும் கொண்டாடித் தீர்த்தனர். இந்த நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி குஜராத் சென்றுள்ளார். காந்தி நகர் வருகை தந்த அவர் அங்கு ரோட்ஷோ நடத்தினார். ஆயிரக்கணக்கானோர் சாலையின் இரு மருங்கிலும் திரண்டு வந்து பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்திலிருந்து பாஜக தலைமையகமான கமலம் உள்ள இடம் வரை வழியெங்கும் பெரும் கூட்டமாக பாஜகவினர் திரண்டிருந்து பிரதமரை வரவேற்றனர்.

2 நாள் விஜயமாக தனது சொந்த மாநிலத்திற்கு வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளார். இன்று மாலை குஜராத் பஞ்சாயத் மகா மாநாட்டில் அவர் கலந்து கொண்டு பேசவுள்ளார். இதில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

அடுத்த தேர்தல்.. குஜராத்தில்

5 மாநிலங்களுக்கு தேர்தல் முடிந்துள்ள நிலையில் இந்த ஆண்டு கடைசியில் குஜராத்துக்கு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்காகத்தான் இப்போதே தயாராக ஆரம்பித்துள்ளது பாஜக. 4 மாநிலங்களில் மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்தது போல குஜராத்திலும் ஆட்சியைத் தக்க வைக்க பாஜக மும்முரமாக உள்ளது.

குஜராத் சட்டசபையில் மொத்தம் 182 இடங்கள் உள்ளன. கடந்த 2017ம் ஆண்டு அங்கு நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கு 99 இடங்களில் வெற்றி கிடைத்தது. காங்கிரஸ் கட்சிக்கு 77 இடங்களில் வெற்றி கிடைத்தது. பெரும்பான்மைக்குத் தேவையான பலம் 92 ஆகும். 2017 தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற பின்னர் விஜய் ரூபானி முதல்வரானார். ஆனால் தற்போது முதல்வராக இருப்பவர் பூபேந்திர படேல் ஆவார்.

நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது அடைந்த பிரபல்யத்தை அதற்குப் பிறகு குஜராத்துக்கு முதல்வராக வந்த யாருமே பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குஜராத்தில் பாஜகவின் பலம் ஒவ்வொரு தேர்தலிலும் சரிந்து வருகிறது. 1990ம் ஆண்டு முதல் முறையாக குஜராத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. அத்தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.சிமன்பாய் படேல் தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தது. அதன் பின்னர் தொடர்ந்து பாஜக தான் குஜராத்தை ஆண்டு வருகிறது.

பாஜக அதன் பிறகு தேர்தல்களில் பெற்ற இடங்கள்: 1995ல் 121 இடங்கள், 1998ல் 117 இடங்கள், 2002ம் ஆண்டு 127, 2007ம் ஆண்டில் 117 இடங்கள், 2012ம் ஆண்டு நடந்த தேர்தலில் 115 இடங்களைப் பெற்றது பாஜக. ஆனால் 2017 தேர்தலில் 100 இடங்களைக் கூட அக்கட்சியால் பெற முடியவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை ஈட்டும் வகையில் செயல்பட பாஜக மும்முரமாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.