இஸ்லாமாபாத்:அதிவேக மர்ம பொருள் ஒன்று, இந்திய பகுதியில் இருந்து பறந்து சென்று, பாகிஸ்தான் வான்வெளியில் விழுந்து நொறுங்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, பாகிஸ்தானுக்கான இந்திய துாதரை நேரில் அழைத்து, அந்நாட்டு அரசு கண்டனம் தெரிவித்து உள்ளது.
மர்ம பொருள்
இது குறித்து, பாக்., வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ராஜஸ்தானின் சூரத்கர் பகுதியில் இருந்து அதிவேகமாக பறந்த மர்ம பொருள் ஒன்று, பாக்., வான்வெளிக்குள் கடந்த 9ம் தேதி மாலை 6:43 மணிக்கு நுழைந்தது. 40 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து வந்த அந்த மர்ம பொருள், 3 நிமிடம், 44 வினாடிகளில் 124 கி.மீ., துாரத்தை அதிவேகமாக கடந்து, பாக்.,கின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மியான் சுன்னு என்ற இடத்தில் விழுந்து நொறுங்கியது.
இது ஏவுகணையா அல்லது வேறு ஏதேனும் பறக்கும் பொருளா என்பது தெரியவில்லை. இதில், பொது மக்கள் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது; உயிர் பலியோ, காயமோ ஏற்படவில்லை. இந்திய தரப்பின் இந்த அத்துமீறிய செயலால், பாக்., வான்வெளியில் பறக்கும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணியர் விமானங்கள் மிகப் பெரிய விபத்தை சந்தித்திருக்கக்கூடும்.
விசாரணை
அது மட்டுமின்றி, பொதுமக்கள் உயிருக்கு பெரும் அச்சுறுத்தலை இது விளைவித்து உள்ளது. பாகிஸ்தானுக்கான இந்திய துாதரை நேரில் அழைத்து, இந்த சம்பவம் தொடர்பாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது.மேலும், இந்த பறக்கும் மர்ம பொருள் குறித்து தீவிர விசாரணை நடத்தி, அதில் கிடைக்கும் தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள இந்திய அரசை அறிவுறுத்துமாறு, துாதரிடம் வலியுறுத்தப்பட்டது.இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement