தொழிலாளர் இழப்பீட்டுத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நேற்று (10) விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
சட்டமூலத்தை சமர்ப்பித்து உரையாற்றிய தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, நபர் ஒருவர் பணியில் ஈடுபடும்போது, விபத்துக்குள்ளானால், வழங்கப்படும் இழப்பீட்டு தொகையை ஐந்து இலட்சம் ரூபாவிலிருந்து 20 இலட்சம் ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.
தனியார் துறையில் ஊழியர் சேவைக்கு வரும்போதோ, பணியிலிருந்து திரும்பும்போதோ விபத்துக்குள்ளானால், இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுவதில்லை. இந்நிலையில், இந்த இழப்பீட்டு திருத்தச் சட்டமூலத்தில் அவர்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும் இந்த இழப்பீடு தொடர்பான சட்டம் 16 வருடங்களின் பின்னர் திருத்தப்படுகிறது
கடமையில் ஈடுபட்டிருக்கையில் அனர்த்தத்துக்கு முகம் கொடுத்தால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நஷ்ட ஈடு வழங்கும் சட்டம் 08 தசாப்தங்குளுக்கு முன்னர் தயாரிக்கப்பட்டது. 2005 இல் இந்த சட்டம் திருத்தப்பட்டு நஷ்ட ஈட்டுத் தொகை அதிகரிக்கப்பட்டது. கடந்த 16 வருடங்களாக இந்த தொகை அதிகரிக்கப்படவில்லை. சம்பள தொகை அதிகரித்துள்ளது.
வேலையாட்கள் நஷ்டஈடு திருத்தச் சட்டமூலத்தை திருத்துவதாக தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அதன் பிரகாரம் இந்த திருத்தம் தொடர்பில் தொழிற்சங்கங்களுடனும் முதலாளிமார்களுடனும் கலந்துரையாடினேன்.
தோட்டத் தொழிலாளர் ஒருவரை பாம்பு கடித்தால் நஷ்ட ஈடு கிடைக்காது. வேலைத்தளத்திலிருந்து வீட்டுக்கு வருகையிலோ தொழிலுக்கு வருகையிலே அனர்த்தம் நடந்தால் நஷ்ட ஈடு கிடைக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அரச ஊழியர்களை போன்றே தனியார் ஊழியர்களுக்கும் நஷ்டஈடு கிடைக்க இந்த திருத்தங்கள் வழிவகுக்கும்.
ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை நிதியத்தை வழங்காவிட்டின் 50 வீத அபராதம் விதிக்கப்படுகிறது. பணத்தை வழங்குவதை தாமதித்தால் 05 முதல் 30 வீத அபராதம் விதிக்க புதிய திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த அபராத தொகை ஊழியர்களுக்கு கிடைக்கும். ஊழியர்களின் நலனுக்காக இந்த திருத்தங்கள் செய்யப்படுவதாக அமைச்சர் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேல் தெரிவித்தார்.