இயற்கை வேளாண் மற்றும் வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு ஊக்கப் பரிசு வழங்கப்படும் என நாமக்கல் மாவட்ட வேளாண் உழவர் நலத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட வேளாண் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இயற்கை வேளாண்மை, வேளாண்மையில் புதிய உள்ளூர் தொழில்நுட்பங்கள், வேளாண் தொழிலுக்கு உகந்த புதிய இயந்திரங்கள் கண்டுபிடிப்பு, விளைபொருள்கள் ஏற்றுமதி உள்ளிட்டவத்தில் சிறந்து விளங்கும் விவசாயிகளை, ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு ஊக்குவித்து பரிசளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2021-22ஆம் ஆண்டில் புதிய விவசாய உள்ளூர் தொழில்நுட்பங்களையும், இயந்திரங்களையும் கண்டுபிடிக்கும் விவசாயிகளை ஊக்குவித்து, 2 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட இருப்பதாகவும், இயற்கை வேளாண்மை மற்றும் வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளையும் ஊக்குவித்து, தலா, 2 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள், செல் போனில் உழவன் செயலி மூலமாக, தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும், குத்தகைக்கு சாகுபடி செய்பவர்களும் இதில் கலந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தந்த பகுதிகளில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை தொடர்பு கொண்டு விவரங்கள் தெரிந்து கொள்ளலாம் என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.