பிரபல கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன் மரணத்துக்கு, Liquid diet எனப்படும் நீர்ஆகார உணவுமுறையே காரணம் எனக் கூறப்படும் நிலையில், அதன் பலன் மற்றும் பாதகங்கள் குறித்து பார்ப்போம்.
தாய்லாந்தில் மரணமடைந்த பிரபல கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன் 14 நாட்கள் தொடர்ந்து Liquid diet எனப்படும் நீர் ஆகார முறையை கடைப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி சொகுசு விடுதியில் உயிரிழந்து கிடந்தார். நீர்ஆகார முறை என்பது, குறிப்பிட்ட நாட்களுக்கு நீர்ம உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்வதாகும். இந்த உணவுமுறை காலத்தில், சூப், பழம் மற்றும் காய்கறி சாறுகள், காபி, டீ, பால் மட்டுமே எடுத்துக் கொள்ளலாம்.
இந்த உணவு முறையால் உடல் எடை வேகமாக குறைவதாகக் கூறப்படுகிறது. வாய்வழியாக உணவை மென்று விழுங்க முடியாதவர்களுக்கு இந்த உணவுமுறை மூலம் உடலுக்கு போதிய அளவில் சத்துகள் கிடைக்கின்றன. நீர் ஆகார முறையால், பெரிய அளவில் செரிமானப் பிரச்னைகள் ஏற்படுவதில்லை. மேலும் நீர் ஆகார முறையில் உணவை தயாரிப்பது எளிதானது. விலையும் குறைவானது. இரைப்பை குடல் அறுவைச் சிகிச்சை செய்தோருக்கும் இந்த உணவு முறை பயனளிக்கிறது.
அதேநேரத்தில், நீர் ஆகார முறையால் குறைந்த கலோரியே உடலுக்கு கிடைப்பதால், நாள் முழுவதற்கும் தேவையான சக்தி கிடைப்பதில்லை. நீர் ஆகார முறையால் வேகமாக கலோரி எரிக்கப்பட்டு உடலில் கலோரி குறைகிறது. அதன் மூலம் உடல் எடை விரைவாக குறைவது பாதகமாக பார்க்கப்படுகிறது. மேலும் நீர் ஆகார முறை உடலுக்கு தேவையான முழுமையான உயிர்சத்துகளை வழங்குவதில்லை. இந்த உணவு முறை காலத்தில் காயம் ஏதாவது ஏற்பட்டால் குணமடைவதில் தாமதமாகிறது.
இந்த நிலையில் நீர் ஆகார உணவு முறையை வாரக்கணக்கில் பின்பற்றக்கூடாது என எச்சரிக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் தாரணி கிருஷ்ணன். ஒரு மனிதன் உயிர்வாழ்வதற்கு மாவு, புரதம், கொழுப்பு, வைட்டமின், மினரல் மற்றும் நாா்சத்துகள் தேவைப்படுகின்றன. நீர் ஆகாரா உணவு முறையால் இது பல சத்துகள் கிடைப்பதில்லை. உடல் எடையை வேகமாக குறைக்கக் கூடாது என கூறும் ஊட்டச்சத்து நிபுணர்கள் ஒரு மாதத்தில் 2 கிலோ வரை குறைக்கலாம் என்கின்றனர். முறையான உணவுப் பழக்கம், உடற்பயிற்சிகள் மற்றும் நிபுணர்கள் பரிந்துரைக்கும் உணவு ஆகியற்றின் மூலமை உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதே ஊட்டச்சத்து வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM