ராஜஸ்தான், சட்டீஸ்கர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்டில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்கிறது. இந்நிலையில், 5 மாநில தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில், பஞ்சாப்பில் காங்கிரசை காலி செய்து ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்து உள்ளது. இதனால், ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கரில் மட்டும் தற்போது காங்கிரஸ் ஆட்சி நீடிக்கிறது. தொடர்ந்து, சரிந்து வரும் காங்கிரசின் சாம்ராஜ்ஜியத்தால், தொண்டர்கள் முதல் மூத்த தலைவர்கள் வரை சோர்வடைந்துள்ளனர். ராஜஸ்தான், சட்டீஸ்கர், தெலங்கானா, கர்நாடகா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தல் காங்கிரசுக்கு அக்னி பரீட்சையாக அமைந்துள்ளது.இந்த மாநிலங்களில் கர்நாடகாவில் மட்டும் காங்கிரஸ் வலுவலாக உள்ளது. சமீபத்தில் நடந்த தேர்தலில் எழுச்சி பெற்று பாஜ.வுக்கு (ஆளும் கட்சி) இணையான வெற்றி பெற்று வருகிறது. அடுத்தாண்டு நடக்க உள்ள மேற்கண்ட மாநில தேர்தலில் காங்கிரஸ் எழுச்சி பெற்றால் மட்டுமே, 2024ம் நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜவுக்கு போட்டியாகவும், காங்கிரஸ் தலைமையில் எதிர்கட்சிகள் அணிவகுக்கும். இல்லையென்றால் மாநில கட்சிகள் சேர்ந்து 3வது அணியை அமைத்து அவர்களுக்கு கீழ் காங்கிரசுக்கு அழைப்பு விடுப்பார்கள். உட்கட்சி பூசலால், கொடி கட்டி பறந்த காங்கிரஸ் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.