கொல்கத்தா: 5 மாநில தேர்தல் முடிவு வரும் நாடாளுமனற தேர்தலில் எதிரொலிக்காது, 2024 தேர்தலில் பாஜகவை எதிர்த்து போராட விரும்பும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.
நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. இதில், பஞ்சாப் தவிர உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. இதனை அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
இந்தநிலையில் 5 மாநில தேர்தல் முடிவுகள் தொடர்பாக மம்தா பானர்ஜியும் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவர் கூறியுள்ளதாவது:
வாக்குப்பதிவு இயந்திரங்கள், மத்தியப் படை, மத்திய ஏஜென்சிகளைப் பயன்படுத்துவதன் மூலம் பாஜக சில மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதற்காக தற்போது அவர்கள் குதித்துக் கொண்டிருக்கிறார்கள், கொண்டாடுகிறார்கள். ஆனால் அவர்களால் இசையமைக்க முடியாது. இசைக்க வேண்டுமென்றால் உங்களுக்கு ஒரு ஹார்மோனியம் தேவை.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை அகற்றியதற்காக வாரணாசி கூடுதல் மாவட்ட ஆட்சியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டால், அது மிகப்பெரிய விஷயம். அகிலேஷ் யாதவ் தோற்கடிக்கப்பட்டதாக எண்ணுகிறேன். அகிலேஷ்க்கு மனச்சோர்வு, வருத்தம் இருக்கக்கூடாது. அவர் மக்களிடம் சென்று இதை விளக்க வேண்டும்.
அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களையும் தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இவை அனைத்தும் மக்கள் வாக்களிக்க பயன்படுத்திய அதே இயந்திரங்கள், பின்னர் எண்ணுவதற்கு கொண்டு வரப்பட்டதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
இந்த 5 மாநில தேர்தல் முடிவு வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்காது. 2024 தேர்தலில் பாஜகவை எதிர்த்து போராட விரும்பும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். காங்கிரஸ் நம்பகத் தன்மையை இழந்து வருகிறது.
காங்கிரஸ் விரும்பினால் அனைத்துக் கட்சிகளும் இணைந்து 2024 பொதுத் தேர்தலில் போட்டியிடலாம். இப்போதைக்கு ஆக்ரோஷமாக இருக்க வேண்டாம். முன்பு காங்கிரஸ் தங்கள் அமைப்பின் மூலம் நாடு முழுவதும் வெற்றி வாகை சூடியது.
ஆனால் அது தற்போது இல்லை. அவர்கள் நம்பகத்தன்மையை இழந்து வருகிறார்கள். பல மாநில அரசியல் கட்சிகள் உள்ளன. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதுகுறித்து மற்ற கட்சிகள் கண்டிப்பாக முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.