கொப்பால்-பெங்களூரு நகர மாவட்டத்துக்கு உட்பட்ட அங்கன்வாடி மையங்களில், 548 மையங்களுக்கு சொந்த கட்டடங்கள் இல்லை. 644 மையங்களில் அடிப்படை வசதிகள் இல்லை.பெங்களூரு நகர மாவட்டத்தில், மொத்தம் 2,587 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இவற்றில் பெங்களூரு மாநகராட்சி கட்டுப்பாட்டில் 1,444, நகராட்சி, டவுன்சபை எல்லையில் 169, கிராம பஞ்சாயத்து கட்டுப்பாட்டில், 974 அங்கன்வாடிகள் செயல்படுகின்றன.தற்போது மாநகராட்சிக்கு உட்பட்ட அங்கன்வாடிகளில் 548 தனியார் மையங்களில் இயங்குகின்றன. இதற்காக அரசு மாதந்தோறும் 6,000 ரூபாய் வாடகை வீதம், லட்சக்கணக்கான ரூபாய் செலுத்துகிறது. இது அரசு கருவூலத்துக்கு சுமையை ஏற்படுத்துகிறது.இதை தவிர்க்கும் நோக்கில், அரசு கட்டடம், பள்ளிகளில் காலியாக உள்ள அறைகள், சமுதாய பவன் உட்பட அரசு இடங்களை தேடி வருகிறது.அதேபோல, பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட 644 அங்கன்வாடிகளில், அடிப்படை வசதிகள் பற்றாக்குறையாக உள்ளது. மின் விளக்கு, குடிநீர் வசதி இல்லை. உடைந்த ஜன்னல், கதவு போன்ற பிரச்னைகளுக்கிடையே, குழந்தைகள் பாடம் படிக்க வேண்டியுள்ளது.பழுது பார்த்து தரும்படி பெங்களூரு மாநகராட்சியிடம், மகளிர், குழந்தைகள் நலத்துறை கோரிக்கை விடுத்தது. இதற்கு சம்மதித்த மாநகராட்சி, 5.5 கோடி ரூபாய் செலவில் அங்கன்வாடிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்ய முன் வந்துள்ளது.
Advertisement