“கிராமங்களின் முன்னேற்றம் என்ற தனது கனவு, நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவிற்குள் நனவாக வேண்டும்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசம், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்துள்ள நிலையில், இதற்கான வெற்றிப் பேரணி குஜராத்தில் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற இந்தப் பேரணியானது, விமானநிலையம் முதல் பாஜக தலைமை அலுவலகம் வரையிலான 10 கிலோமீட்டர் தொலைவு வரை சென்றது.
இதனைத் தொடர்ந்து, பஞ்சாயத்து மகா சம்மேளனம் என்ற மாநாட்டில் பிரதமர் பங்கேற்றார். உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் சுமார் ஒரு லட்சம் பேர் வரை பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், “கிராமங்கள் சுய சார்புடனும், வலிமையாகவும் இருக்க வேண்டும். கிராமங்கள் முன்னேறுவதற்காக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இலக்கை நிர்ணயித்து செயல்பட வேண்டும். மகாத்மா காந்தி எப்போதும் கிராமங்களின் முன்னேற்றம் குறித்தே வலியுறுத்தி வந்திருக்கிறார். மகாத்மா கண்ட கிராம முன்னேற்றம் என்ற கனவை நாம் நனவாக்க வேண்டும். கிராமங்களின் முன்னேற்றம் என்ற தனது கனவு, நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவிற்குள் நனவாக வேண்டும்” என அவர் கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM