கேசப் பராமரிப்பில் ஷாம்பூ, கண்டிஷனர் போன்று சீரம் பயன்படுத்துவதும் மிகுந்த நன்மையைத் தரக்கூடியது. கேசத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் வைத்திருப்பது, கேசம் உதிர்வில் இருந்து பாதுகாத்து ஊட்டம் தருவது என சீரத்தின் பங்கு கேசப் பராமரிப்பில் அதிகம். சீரம் பயன்படுத்துவது தொடர்பாக சில சந்தேங்கங்கள் நிலவி வருகின்றன. அதிக பலன்களைத் தரக்கூடிய சீரத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
1. முதலில் உங்கள் கேசத்திற்கு ஏற்ற சீரமை வாங்கிக் கொள்ளவும். மெல்லிய கேசம், அடர்ந்த கேசம், வறண்ட கேசம், அதிக மாசுவுக்கு உள்ளாகும் கேசம் என உங்கள் கேசத்தின் தேவைக்கு ஏற்ப சீரத்தை தேர்ந்தெடுத்து வாங்கவும்.
2. சீரம் எப்போதுமே கேசத்திற்கானது மட்டும் என்பதால், அதனை கண்டிப்பாக தலைப்பகுதியில் (scalp) பயன்படுத்தக் கூடாது. கேசத்தின் நடுப்பகுதில் இருந்து நுனிவரை தடவினால் போதும்.
3. சீரம் பயன்படுத்துவதில் மிக முக்கியமான விஷயம், கேசத்திற்கு நன்றாக ஷாம்பூ வாஷ் கொடுத்த பின்தான் சீரம் பயன்படுத்த வேண்டும். தலைக்குக் குளித்தவுடன் கூந்தல் முழுவதுமாக காய்ந்துவிடாமல், ஈரப்பதத்துடன் இருக்கும்போதே சீரம் அப்ளை செய்ய வேண்டும்.
4. சீரம் பயன்படுத்துதலில் ஞாபகத்தில் இருக்க வேண்டிய விஷயங்கள்… அதிகமாகப் பயன்படுத்த கூடாது; கேசத்தை அலசாமல் பயன்படுத்தக் கூடாது.
சீரத்தின் நன்மைகள்:
* சீரம் தலைமுடியை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் மாற்றுவதுடன் சிக்கு ஏற்படுவதைக் குறைக்கிறது.
* சீரம் ஒளியைப் பிரதிபலிக்கும் தன்மையுடன் இருப்பதால், முடியை பளபளப்பாகக் காட்டும். தூசிலிருந்து காக்கும்.
*சீரத்தில் குறைந்த அளவே pH உள்ளது; கேசத்துக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்கிறது.
* சூரிய ஒளி, மாசு, டை உள்ளிட்ட ரசாயனங்கள், ஹேர் ஸ்டைலிங்க்கு கொடுக்கப்படும் வெப்பம் போன்றவை ஏற்படுத்தும் பாதிப்புகளில் இருந்து சீரம் கேசத்தின் ஆரோக்கியத்தை மீட்கிறது.
* வறண்ட கேசம், கலரிங் செய்ததன் மூலம் சேதமடைந்த கேசத்தின் ஈரப்பதத்தை மீட்க உதவுகிறது.
செயற்கையாகக் கடைகளில் கிடைக்கும் சீரம்தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. வீட்டிலேயே சில பொருள்களைக் கொண்டு சீரம் தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
– 4 டேபிள்ஸ்பூன் அவகேடோ எண்ணெய்
– 2 டேபிள்ஸ்பூன் ஜோஜோபா (Jojoba) எண்ணெய்
– 2 டேபிள்ஸ்பூன் பாதாம் எண்ணெய்
– 2 டேபிள்ஸ்பூன் ஆர்கான் (Argan) எண்ணெய்
– 2 டேபிள்ஸ்பூன் திராட்சைவிதை எண்ணெய்
இவற்றை ஒன்றாகக் கலந்து சீரம் ஆகப் பயன்படுத்தலாம்.