அகமதாபாத்: தங்கள் அமைப்பில் இணைய இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருவதாகவும், 2024-க்குள் அனைத்து நகரங்களிலும் கிளை என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்எஸ்எஸ் தெரிவித்துள்ளது.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசிய பொதுக் குழு குஜராத் மாநிலம் கர்ணாவதியில் துவங்கியது. மார்ச் 11 முதல் 13 வரை நடைபெறும் இந்தப் பொதுக் குழுவில் நாடு முழுவதிலும் இருந்து 1,248 நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் மற்றும் அகில இந்திய பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹொசபலே ஆகியோர் இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்எஸ்எஸ் இணைச் செயலாளர் மன்மோகன் வைத்யா, ” இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கரோனா காரணமாக நின்று போன சங்கப் பணிகளில் 98.6% மீண்டும் துவங்கியுள்ளன.
நாடு முழுவதும் உள்ள 59,000 மண்டலங்களில் 41% மண்டலங்களில் கிளை செயல்படுகின்றன. 2,303 நகரங்களில் 94% நகரங்களில் கிளைகள் செயல்படுகின்றன. அடுத்த 2 ஆண்டுகளுக்குள் அனைத்து நகரங்களிலும் ஆர்எஸ்எஸ் கிளை என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கரோனாவின் போது சமுதாயத்துடன் இணைந்து, ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பணியாற்றினார்கள். நாடு முழுவதும் 5.50 லட்சம் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் இப்பணியில் ஈடுபட்டார்கள். சங்கத்தின் குடும்ப விழிப்புணர்வு நிகழ்ச்சி, பசுப் பாதுகாப்பு, கிராம முன்னேற்றம் உள்ளிட்ட பணிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணையும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது” என்றார் மன்மோகன் வைத்யா