குஜராத்தில் அதானி நிறுவனம் மேற்கொள்ளும் ரயில்வே திட்டத்துக்காக, நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குஜராத்தின் சூரத் மாவட்டத்தில் உள்ள ஹஸிரா என்ற பகுதியில் அதானி நிறுவனத்தின் துறைமுகம் இயங்கி வருகிறது. இதனிடையே, இந்த துறைமுகம் முதல் கோதன் கிராமம் வரை சுமார் 28 கிலோமீட்டர் தொலைவுக்கு ரயில்களில் சரக்குகளை எடுத்து செல்ல வசதியாக தண்டவாளம் அமைக்கும் பணிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக அந்தப் பகுதிகளில் இருக்கும் நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பெரும்பாலானவை விவசாய நிலங்கள் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சூரத்தில் இன்று ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்திய விவசாய சங்கத் தலைவர் ஒருவர் கூறுகையில், “அதானி துறைமுகம் அமைந்திருக்கும் ஹஸிராவின் கிரிப்சோ பகுதியில் இருந்து கோதன் கிராமம் வரை ஏற்கனவே ரயில் பாதை இருக்கிறது. அதனை தற்போது விரிவுப்படுத்தினாலே போதுமானது.
புதிய ரயில் பாதையை அமைக்க தேவையே இல்லை. தற்போது இந்த ரயில் பாதையை அமைப்பதால், 15 கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்படும். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். எனவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும்” என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM