புதுடெல்லி: நாட்டில் அன்றாட கரோனா பாதிப்பு 3,614 ஆக பதிவாகியுள்ளது. இது கடந்த 2020 மே மாதத்திற்குப் பின்னர் மிகவும் குறைவு என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3.614 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் மொத்த கரோனா பாதிப்பு 4,29,87,875 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் 40,559 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். இதுவரை நாடு முழுவதும் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,15,803. நேற்று மட்டும் புதிதாக 89 பேர் கரோனாவால் உயிரிழந்தனர். நேற்று தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு பதிவாகவில்லை. தமிழகத்தில் கடந்த இரண்டாண்டுகளுக்குப் பின்னர் நேற்று கரோனா மரணமில்லாத நாளாக அமைந்தது.
நாடு முழுவதும் கரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம், 98.71 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,24,31,513 ஆக அதிகரித்துள்ளது.
179 கோடி டோஸ் தடுப்பூசி: கரோனா பெருந்தொற்றுக்கு எதிராக முதன்முதலாக இந்தியாவில் கடந்த 2021 ஜனவரி 16 ஆம் தேதி தடுப்பூசித் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஓராண்டு தாண்டிய நிலையில் நாடு முழுவதும் இதுவரை 179.91 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
உலகளவில் 45 கோடி பேர் பாதிப்பு: கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கரோனா வைரஸ் உருவாகி, உலகம் முழுவதும் பரவியது. இந்த வைரஸ் மரபணு மாற்றம் பெற்று புதுப்புது வடிவில் கடும் பாதிப்பு மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தியது. கடந்த 2 ஆண்டுகளில் 45 கோடிக்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டனர். சுமார் 60 லட்சம் பேர் தொற்றின் தீவிரத்தால் உயிரிழந்தனர்.
மீண்டும் சீனாவில் பாதிப்பு: கடைசியாக வந்த ஒமைக்ரானுக்கு பிறகு உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு சற்று குறைந்தது. இந்நிலையில் தற்போது சீனாவில் மீண்டும் புதிய வகை கரோனா வைரஸ் பரவி வருகிறது. இதையடுத்து, சீனாவின் வடகிழக்கில் உள்ள சாங்சுன் நகரில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிலின் மாகாணத்தின் தலைநகரான சாங்சுன், முக்கிய தொழில் நகரமாகும். இங்கு 90 லட்சம் பேர் வசிக்கின்றனர். இங்கு வசிப்பவர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். நகரில் கரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்காக 2 நாட்களுக்கு ஒருமுறை, குடும்பத்தில் ஒருவர் மட்டுமே வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.கரோனா தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து முதல்முறையாக சீனா முழுவதும் கரோனா பாதிப்பு இந்த வாரம் ஆயிரத்தை தாண்டியுள்ளது. மூன்று வாரங்களுக்கு முன்பு, தினசரி பாதிப்பு 100-க்கும் குறைவாக இருந்த நிலையில் நேற்று புதிதாக 1,369 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நீண்டகால ஊரடங்கு பொருளாதாரத்தை பாதிக்கலாம் என்று சீனாவின் மத்திய பொருளாதார திட்டமிடல் நிறுவனம் எச்சரித்தது. மற்ற நாடுகளைப் போல சீனர்களும் இந்த வைரஸுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும் சீனாவின் உயர் விஞ்ஞானி ஒருவர் கடந்த வாரம் கூறியது குறிப்பிடத்தக்கது.