சென்னை: அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் நலன் கருதியே உடல்நலம் சார்ந்த விவரங்கள் சேகரிக்கப்படுவதாக பள்ளிக்கல்வி துறை விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சுய விவரங்கள், கல்வி சார்ந்த பல்வேறு தகவல்கள் பள்ளிக் கல்வி மேலாண்மை தகவல் மையத்தின் (எமிஸ்) தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் மாணவர்களுக்கான நலத் திட்டங்கள், கற்றல் செயல்பாடுகள் தமிழக அரசால் முன்னெடுக்கப்படுகின்றன.
இதற்கிடையே, சுகாதாரத் துறை அறிவுறுத்தலின்படி மாணவர்கள் உடல்நலம் சார்ந்த தகவல்களையும் திரட்டி எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த 8-ம் தேதி நடந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
அந்த வகையில், மாணவர்களிடம் 8 பிரிவுகளில் 64 கேள்விகளுக்கு பதில் பெற்று பதிவு செய்யுமாறு ஆசிரியர்களுக்கு தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.
அதில், மாணவர்களின் உணவு பழக்கங்கள், கால்கள் அல்லது பாதம் வளைந்துள்ளதா, உயரம், எடை குறைவாக உள்ளனரா, சத்துணவில் பிடித்த உணவு, கண் பார்வை குறைபாடு உள்ளதா, பான், ஜர்தா போடும் பழக்கம் உள்ளதா, பல் சிதைவு, ஈறு நோய்இருக்கிறதா, சிறுநீர் கழிக்கும்போது ஏதேனும் தொந்தரவு உள்ளதா, மாணவிகளின் மாதவிலக்கு தகவல்கள் உள்ளிட்ட விவரங்களை சேகரித்து பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மாணவிகளின் மாதவிலக்கு குறித்த தகவல்களை சேகரிப்பது ஆசிரியர்கள் தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி பள்ளிக்கல்வி துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது: மாணவர்களின் உடல்நலன் சார்ந்து சுகாதாரத் துறைக்கு தகவல்களை அளிக்கவும், அவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்யவும்தான் இத்தகைய தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. இதில் சில கேள்விகளுக்கு மட்டுமே தினமும் பதில்அளிக்க வேண்டும். மற்ற கேள்விகளுக்கு மாதம் ஒரு முறை பதில்சமர்ப்பித்தால் போதும். இதன்மூலம் மாணவர்களுக்கு உடல் ரீதியாக ஏதேனும் குறைபாடு இருந்தால், உரிய மருத்துவ உதவிகளை அளிக்க முடியும்.
பெண்களுக்கு மாதவிலக்கு என்பது இயல்பான உடல்சார்ந்த நிகழ்வாகும். மாதவிலக்கு காலத்தில் அதிக ரத்தப்போக்கால் மாணவிகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதைகருத்தில் கொண்டுதான் மாதவிலக்கு விவரங்கள் கேட்டுப் பெறப்படுகின்றன. அதுவும் ஆசிரியைகள் மூலமாகவே இந்ததகவல்களை சேகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பாலியல் பாகுபாடு தொடர்பாக மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது ஆசிரியர்களின் கடமைகளில் ஒன்று. மாதவிலக்கு தொடர்பாக பேசுவதற்கு ஆசிரியைகளே தயக்கம் காட்டினால் மாணவிகளிடம் தவறான பிம்பத்தை ஏற்படுத்திவிடும். அதனால் இந்த விவகாரத்தில் தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்த வேண்டாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.