"அவர் தன்னை மாற்றிக் கொண்டால் கோவைக்கு நல்லது" -எம்.பி பி.ஆர் நடராஜன் விமர்சனத்துக்கு வானதி பதில்

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன், கடந்த சில நாள்களுக்கு முன்பு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வைத்திருந்தார். அந்த மனுவில், கோவையை பாலக்காடு கோட்டத்தில் இருந்து பிரித்து, சேலத்தில் இணைக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

மத்திய அமைச்சரிடம் வானதி சீனிவாசன் மனு

கோவை ஏற்கெனவே சேலம் கோட்டத்தில்தான் உள்ளது. இதுதொடர்பாக கோவை எம்.பி பி.ஆர். நடராஜன் வானதி சீனிவாசனை விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் பி.ஆர் நடராஜனுக்கு வானதி சீனிவாசன் பதில் அளித்துள்ளார்.

இதுகுறித்து வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில் நிலையங்கள் உள்ளிட்ட 79.55 கி.மீ. வரையிலான ரயில் பாதைகள் இன்னமும், பாலக்காடு கோட்டத்தில்தான் இருக்கின்றன. இதை கோவை எம்.பி.க்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

பி.ஆர். நடராஜன்

அதை மறைத்து விட்டு, ஒட்டுமொத்த கோவை மாவட்டமும், சேலம் கோட்டத்தில் இணைந்து விட்டது போன்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார். மக்கள் பிரச்னைகளுக்காக, இதுவரை தனது லெட்டர் ஹெட்டை பயன்படுத்தாதவர், இப்போது எனக்காக பயன்படுத்தியிருக்கிறார். அதற்காக நன்றி.

ரயில்வே கோட்டம் மட்டுமல்லாது, மேட்டுப்பாளையம், கோவையில் இருந்து திருச்செந்தூருக்கு ரயில், கோவையின் அருகில் உள்ள நகரங்களுக்குச் செல்ல பாசஞ்சர் ரயில், கோவை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சர்க்குலர் ரயில், வடகோவை ரயில் நிலையத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ரயில்வே அமைச்சரிடம் நான் வலியுறுத்தி இருக்கிறேன்.

கோவை ரயில் நிலையம்

ஒரு சட்டமன்ற உறுப்பினராக ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து, கோரிக்கை விடுக்கும் போது மக்களவை உறுப்பினராக அவரும் இணைந்து பணியாற்றியிருக்க வேண்டும். அதற்கு மனமில்லாமல் எங்கே, நான் விடுத்த கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறி விடுமோ என்ற பதற்றத்தில், விமர்சனங்களை வைத்திருக்கிறார்.

கோவை மக்களுக்கான கோரிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கண்டிப்பாக நிறைவேற்றி விடும் என்று நடராஜனுக்கு தெரியும். அந்த பதற்றத்தில் தான் நீண்ட அனுபவம் வாய்ந்த அவர், பக்குவமில்லாமல் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். 2019-ம் ஆண்டு நீங்கள் எம்.பி.யானது முதல்,

கோவை ரயில் நிலையம்

கோவை தொகுதிக்கு எத்தனை ரயில்களை கொண்டு வந்துள்ளீர்கள்?. கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் பலமுறை கோவை எம்.பி.யாக இருந்த போதும், 1956-ம் ஆண்டு பீளமேடு ரயில் நிலையத்துக்கு பிறகு, ஏன் எந்த புதிய ரயில் நிலையத்தையும் கொண்டு வரவில்லை?

1956-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பார்வதி கிருஷ்ணன் கோவை எம்.பி.யாக இருந்தபோது, கோவை கோட்டத்தை பாலக்காடு கோட்டதோடு இணைத்து, தமிழக வருமானத்தை இழந்தோம் என்பதையும் நினைவூட்டுகிறேன். போத்தனூர் – பொள்ளாச்சி அகல ரயில் பாதை திட்டத்தை விரைவுபடுத்த 2009-14ல் எம்.பி.யாக இருந்த நீங்கள் என்னென்ன நடவடிக்கைகள் எடுத்தீர்கள்?.

ரயில்

கோவை ரயில்வே தொடர்பாக உங்கள் 8 வருட ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்றத்தில் எத்தனை கேள்விகள் எழுப்பியுள்ளீர்கள்?

கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்கு, நாடாளுமன்ற உறுப்பினரோடு இணைந்து பணியாற்ற நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். ஆனால், இதற்காக எந்த முன்னெடுப்பும் இல்லாமல், எந்தவொரு தொலைநோக்கு பார்வையும் இல்லாமல் எம்.எல்.ஏ.வை குறைகூறிக் கொண்டிருக்கிறார். இதனை அவர் மாற்றிக் கொண்டால் கோவைக்கு நல்லது.” என்று கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.