திருப்பதி,
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஜங்கரெட்டிகுடம் நகரில் கடந்த 2 நாட்களாக கூலி வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கு திடீரென வாந்தி, வயிற்றுப் போக்கு மற்றும் வயிற்று வலி போன்ற அறிகுறிகளுடன் 25-க்கும் மேற்பட்டோர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
இந்நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி கடந்த 2 நாட்களில் அடுத்தடுத்து 15 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தது தெரியவந்தது. கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் போலீசார் பிடிக்கச் செல்லும்போது அவர்களுக்கு முன்கூட்டியே தகவலறிந்து தப்பிச் சென்று விடுகின்றனர். இதனால் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் போலீசார் திணறி வருவதாக கூறப்படுகிறது.