திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் நகர கூட்டுறவு வங்கி இயங்குகிறது. வங்கி மேலாளராக ஆரணியைச் சேர்ந்த லிங்கப்பா, நகை மதிப்பீட்டாளராக மோகன் என 20-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பல்வேறு நிலைகளில் பணிபுரிகிறார்கள். இந்த கூட்டுறவு வங்கியின் தலைவராக அ.தி.மு.க-வைச் சேர்ந்த அசோக்குமார் கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்டிருந்தார். அசோக்குமார் ஆரணி நகரச் செயலாளராக அ.தி.மு.க-வில் கட்சிப் பொறுப்பு வகிக்கிறார். இவரின் தந்தை அர்ஜுனன் 1977-ல் ஆரணி தொகுதியின் எம்.எல்.ஏ-வாகவும் இருந்தவர். கூட்டுறவு வங்கியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அசோக்குமார், சுமார் 8.4 கிலோ எடையிலான கவரிங் நகைகளை போலியாக 77 நபர்களின் பெயர்களில் அடகு வைத்து, ரூ.2.39 கோடியை மோசடி செய்திருக்கிறார்.
அவரின் மோசடிக்கு வங்கி மேலாளர் லிங்கப்பா, காசாளர் ஜெகதீசன், நகை மதிப்பீட்டாளர் மோகன், எழுத்தர் சரவணன் உள்ளிட்ட சிலர் உடந்தையாக இருந்திருக்கிறார்கள். மோசடி செய்த பணத்திலிருந்து உடந்தையாக இருந்த அலுவலர்களுக்கு சில லட்சங்களை வாரி இரைத்து தனது கைக்குள்ளேயே வைத்திருந்தாராம் அசோக்குமார். சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி செய்வதாக தி.மு.க, அ.தி.மு.க இருக்கட்சிகளும் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், அசோக்குமார் தலைமையிலான கும்பல் திட்டம் வகுத்து, கைவரிசை காட்டியிருப்பதாக தகவல் வெளியில் கசிந்தது.
இது குறித்து, வேலூர் மண்டல கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கடந்த அக்டோபர் மாதம் 27-ம் தேதி ஆரணி நகர கூட்டுறவு வங்கியில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், போலி நகைகளை வைத்து மோசடி செய்திருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, செய்யாறு கூட்டுறவுத் துணை பதிவாளர் கமலக்கண்ணன் சென்னையிலிருக்கும் வணிக குற்றப்புலனாய்வு பிரிவில் புகாரளித்தார். இதைத்தொடர்ந்து, வங்கி மேலாளர் லிங்கப்பா, காசாளர் ஜெகதீசன், எழுத்தர் சரவணன், நகை மதிப்பீட்டாளர் மோகன் ஆகிய நான்கு பேரையும் திருவண்ணாமலை மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர் ராஜ்குமார் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். கூட்டுறவு வங்கியின் தலைவராக இருந்த அசோக்குமார், அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
மேலும், இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட வணிக குற்றப்பிரிவு போலீஸிலும் புகாரளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்வு செய்த போலீஸார், நகர கூட்டுறவு வங்கியின் தலைவராக இருந்த அ.தி.மு.க நகரச் செயலாளர் அசோக்குமார், வங்கி மேலாளர் லிங்கப்பா, காசாளர் ஜெகதீசன், நகை மதிப்பிட்டாளர் மோகன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய எழுத்தர் சரவணன் தற்போது உயிருடன் இல்லை. அவரை தவிர்த்துவிட்டு மேற்கண்ட 4 பேரையும் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியப் பின்னர் சிறையில் அடைத்தனர்.