ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர் உக்ரேனிய இராணுவ தரப்பில் கொல்லப்பட்ட வீரர்களின் எண்ணிக்கையை ஜனாதிபதி ஜெலென்ஸ்கி முதன்முறையாக வெளியிட்டுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்ய துருப்புகளின் தாக்குதல் 17வது நாளாக தொடர்கிறது. தலைநகர் கீவ் மீது கடும் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது ரஷ்ய துருப்பு.
இந்த நிலையில், கீவ் நகரை தரைமட்டமாக சிதைத்தால் மட்டுமே உங்களால் கைப்பற்ற முடியும் என ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ரஷ்ய துருப்புகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், கடந்த 17 நாட்களில் ரஷ்ய துருப்புகளை எதிர்த்து போரிட்ட உக்ரேனிய இராணுவத்தினர் 1,300 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி முதன்முறையாக வெளிப்படுத்தியுள்ளார்.
இதே காலகட்டத்தில் ரஷ்ய தரப்பில் சுமார் 6,000 வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என மேற்கத்திய நாடுகள் வெள்ளிக்கிழமை மதிப்பீடு செய்துள்ளது.
மேலும், வெள்ளிக்கிழமை வரையான தகவலின் அடிப்படையில், 500 முதல் 600 ரஷ்ய துருப்புகள் உக்ரைன் இராணுவத்திடம் சரணடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா இதுவரை கைப்பற்றியுள்ள உக்ரைன் நகரங்களும் கிராமங்களும் காலாகாலத்திற்கும் அவர்களுக்கு சொந்தாமாவதில்லை, தற்காலிகந்தான், அதில் எனக்கு சந்தேகமேதுமில்லை என தெரிவித்துள்ளார் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி.