பெங்களூரு:
இந்தியா-இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணியை, 252 ரன்களில் சுருட்டியது இலங்கை. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 92 ரன்கள் குவித்தார். விராட் கோலி 23 ரன்கள், ரிஷப் பண்ட் 39 ரன்கள், விஹாரி 31 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணிக்கு, இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் சவால் அளித்தனர். 50 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. மறுமுனையில் விக்கெட்டை காப்பாற்ற போராடிய மேத்யூஸ் 43 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார்.
இதனால் இன்றைய ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்திருந்தது. நிரோஷன் டிக்வெல்லா 13 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்தியா தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளையும், ஷமி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட, இலங்கை அணி 166 ரன்கள் பின்தங்கி உள்ளது. நாளை இரண்டாவது நாள் ஆட்டம் நடபெறுகிறது.