தமிழகத்தில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நாட்களை கடந்துள்ள சுமார் 1 கோடியே 33 இலட்சம் நபர்கள் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக சென்னை மாநகரட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-171, பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் பிரதான சாலையில் உள்ள மீனவர் சமூக நலக்கூடத்தில் இன்று நடைபெற்ற 24ஆவது கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் அவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொதுமக்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க தடுப்பூசி செலுத்துவதை ஒரு இயக்கமாக முன்னெடுத்து மிகப் பெரிய விழிப்புணர்வினை ஏற்படுத்தியுள்ளார்கள்.
இதன் விளைவாக, தமிழகத்தில் பத்து கோடிக்கும் மேற்பட்ட நபர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். கோவிட் தொற்று தற்பொழுது குறைந்திருப்பினும், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தொடர்ந்து கோவிட் மெகா தடுப்பூசி முகாம்கள் தமிழ்நாட்டில் மட்டும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று 24வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம்கள் மாநிலம் முழுவதும் சுமார் 50,000க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நாட்களை கடந்து 1 கோடியே 33 இலட்சத்து 6 ஆயிரத்து 124 நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். இவர்களுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகங்களின் சார்பில் சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் பிற சேவைத்துறை அலுவலர்களால் கணக்கெடுப்பு செய்யப்பட்டு குறுஞ்செய்தி வாயிலாகவும் தகவல் அனுப்பப்படுகிறது.
இருப்பினும், தொற்று பாதிப்பு குறைவாக உள்ளதால், தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் பொதுமக்களிடையே மெத்தனம் காணப்படுகிறது. ஒரு சில அண்டை நாடுகளில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முழுமையான நோய் எதிர்ப்பு சக்தியை பெற இரண்டு தவணை தடுப்பூசி இன்றியமையாதது.
எனவே, இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்திக் கொள்ள வேண்டும்.
15 முதல் 18 வயதிற்குட்பட்டவர்களில் 33,46,000 நபர்களுக்கும் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 28,04,930 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 17,92,178 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. 11.03.2022 வரை முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய 8,55,129 நபர்களில் 6,81,467 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அதாவது முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தியவர்களின் சதவீதம் 79.69 ஆகும். இதுநாள்வரை தமிழ்நாட்டில் செலுத்தப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 10,10,94,834 ஆகும். இது இந்திய அளவில் 10 கோடியை தாண்டிய ஒருசில மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும்.
இன்றைய கோவிட் மெகா தடுப்பூசி முகாமில் மதியம் 1.00 மணி நிலவரப்படி 2,27,000 தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் கோவிட் தொற்று குறைந்து பூஜ்ஜியத்தை நோக்கி குறைந்து வரும் நிலையில் அலட்சியமாக இல்லாமல் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், கிராமப்புற பகுதிகளில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய வயதான நபர்களுக்கு சேவைத்துறைகளின் சார்பில் நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்த வேண்டியது குறித்து தகவல் தெரிவிக்கப்படும்.
சென்னை கிங் இன்ஸ்டிடியூட்டில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் பன்னோக்கு மருத்துவமனை தொடங்குவதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விரைவில் அடிக்கல் நாட்ட உள்ளார்கள்.
மேலும், இங்கு பல்வேறு விதமான தடுப்பூசிகளை உருவாக்கும் ஆராய்ச்சி கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வெகு விரைவில் செயல்படுத்தப்படும்.
சீன நாட்டில் புது விதமான கோவிட் தொற்று பரவி வருவதாக தகவல்கள் வரும் நிலையில் தமிழ்நாட்டில் 87 சதவீதம் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது.
எனவே, புது வகையான தொற்றுகளை எதிர்கொள்ளவும் தமிழ்நாடு அரசு தயார்நிலையில் உள்ளது எனவும்,
கொரோனா இரண்டாம் அலையின் போது 2021 மே மாதம் மட்டும் சுமார் 10,000க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன் கொரோனா சிகிச்சைகளுக்கான கட்டமைப்புகளை மேம்படுத்தியதன் விளைவாக நேற்றைய தினம் இறப்பு என்பது பூஜ்ஜியம் என்ற நிலையில் உள்ளது. இது மிகவும் மகிழ்ச்சியடைய வேண்டிய தகவல்.
இந்தப் பாதுகாப்பான நிலை தொடர பொதுமக்கள் அரசிற்கு முழு ஒத்துழைப்பு அளித்து தவறாமல் கோவிட் தடுப்பூசியினை செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும்,
உக்ரைன் நாட்டிலிருந்து 1,921 மாணவர்களில் 1,890 மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
மீதமுள்ள 31 மாணவர்கள் உக்ரைன் மற்றும் அண்டை நாடுகளில் பாதுகாப்பாக இருப்பதாக அவர்களே உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த மாணவர்களில் 1,524 மாணவர்களுக்கு பயணச் செலவினை தமிழக அரசு ஏற்றுள்ளது.
உக்ரைனிலிருந்து இன்று காலை தமிழகம் வந்தடைந்த 9 மாணவர்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேரடியாக சென்று வரவேற்றார்.
மாணவர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப தமிழ்நாடு அரசினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர் என தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.த.வேலு, மாமன்ற உறுப்பினர் திருமதி ரா.கீதா, மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், துணை ஆணையாளர்கள், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம், உட்பட பலர் உடனிருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.