பெங்களூரு : ‘இஸ்ரோ’வால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘இளம் விஞ்ஞானி’ திட்டத்திற்காக, நாடு முழுதும் இருந்து 150 மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், பல விண்வெளி திட்டங்களை செயல்படுத்தி சாதனை புரிந்து வருகிறது. இந்நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும் என்பது பல குழந்தைகளின் கனவாக உள்ளது.
இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்காக, இளம் விஞ்ஞானி திட்டத்தை, இஸ்ரோ அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், அவர்களுக்கு விண்வெளி தொழில்நுட்பம், விண்வெளி அறிவியல் மற்றும் விண்வெளி பயன்பாடுகள் குறித்த அடிப்படை அறிவு வழங்கப்பட உள்ளது.
கிராமப்புற மாணவர்களுக்காக இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து இஸ்ரோ நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:விண்வெளி குறித்து மாணவர்கள் அறிய வேண்டும் என்ற நோக்கத்தில், இளம் விஞ்ஞானி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், 150 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளை சார்ந்த பணிகள் மற்றும் ஆராய்ச்சிகளில், மாணவர்களுக்கு இந்த திட்டம் ஆர்வத்தை ஏற்படுத்தும் என நம்புகிறோம் .இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement