புதுடெல்லி: உக்ரைனின் சுமி நகரில் செயல்படும் மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஏராளமான இந்திய மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அந்த நகரம் மீது ரஷ்ய ராணுவம் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதன்காரணமாக அங்கு கல்வி பயின்ற இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று ரஷ்ய ராணுவம் கடந்த 8-ம் தேதி போர் நிறுத்தத்தை அமல் செய்தது. இதை பயன்படுத்தி அன்றைய தினம், சுமி நகரில் சிக்கித் தவித்த 674 இந்திய மாணவ, மாணவியர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.அவர்கள் அனைவரும் போலந்து நாட்டிலிருந்து 3 விமானங்களில் தாயகம் அழைத்துவரப்பட்டனர். இதில் 461 பேருடன் 2 விமானங்கள் டெல்லி வந்திறங்கின. 213 பேருடன் ஒரு விமானம், காஜியாபாத் விமானப் படை தளத்தில் வந்திறங்கியது.
உக்ரைனில் தாங்கள் சந்தித்த இன்னல்கள் குறித்து மாணவர் தீரஜ் குமார் கூறும்போது, ‘‘உக்ரைன் போரில் உயிர் பிழைத்தது அதிசயம். எங்களை மீட்க மத்திய அரசுபல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததன் காரணமாக பத்திரமாக நாடு திரும்பியுள்ளோம்’’ என்றார்.
மாணவி மஹிமா ரதி கூறும்போது, ‘‘அபாய ஒலி எழுப்பப்படும்போது பதுங்கு குழிகளுக்கு ஓடி சென்று ஒளிந்து கொள்வோம். இதன்காரணமாகவே குண்டுவீச்சில் இருந்து தப்பித்தோம்’’என்றார்.
மாணவர் சுபாஷ் யாதவ் கூறும்போது, ‘‘குண்டுவீச்சு, ஏவுகணைதாக்குதல் சப்தம் இன்னமும் என்காதுகளில் ஒலித்து கொண்டிருக்கிறது. மனதளவில் போர் சூழலில் இருந்து முழுமையாக மீள காலஅவகாசம் தேவைப்படும்’’ என்றார்.
மாணவர் மோகித் குமார் கூறும்போது, ‘‘எங்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள மின் நிலையம் குண்டுவீச்சில் சேதமானது. உணவு, குடிநீர்தட்டுப்பாடு ஏற்பட்டது’’ என்றார்.
ரஷ்யா, உக்ரைன், செஞ்சிலுவை சங்கத்துக்கு நன்றி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: உக்ரைனின் சுமி நகரில் சிக்கித் தவிந்த இந்திய மாணவ, மாணவியரை மீட்பது பெரும் சவாலாக இருந்தது. ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் மூலம் பிரதமர் மோடியின் வழிகாட்டுதலால் சுமியில் தவித்தஇந்தியர்களை பத்திரமாக மீட்டுள்ளோம். இந்தியர்களை மீட்க உதவிய உக்ரைன், ரஷ்யா, செஞ்சிலுவைசங்கத்துக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் மீட்பு பணியில் உதவிய உக்ரைனின் அண்டைநாடுகளான ருமேனியா, ஹங்கேரி, போலந்து, ஸ்லோவேகியா, மால்டோவா ஆகிய நாடுகளுக்கும் நன்றி. தன்னார்வ தொண்டு ஊழியர்கள், தனிநபர்கள்,நிறுவனங்கள், இந்திய விமான சேவை நிறுவனங்கள்,இந்திய விமானப்படை ஊழியர்கள் மீட்புப் பணியில் அயராது பாடுபட்டனர். அவர்களுக்கும் நன்றி. இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார். |