மாஸ்கோ,
ரஷிய அதிபர் புதின் மற்றும் அண்டை நாடான பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ ஆகிய இருவரும் நேற்று சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், ஐரோப்பாவின் கடைசி சர்வாதிகாரி என அறியப்படும் அலெக்சாண்டர் லுகாஷென்கோவை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் சந்தித்துள்ள நிலையில், உக்ரைன் மீது பெலாரஸ் படையெடுக்க வாய்ப்புள்ளதாக அச்சம் எழுந்துள்ளது.
தற்போது பெலாரஸ் நாட்டு போர் விமானங்கள் உக்ரைன் எல்லையில் தாக்குதலை முன்னெடுத்துள்ளன.ரஷியாவின் திட்டத்தின்படியே பெலாரஸ் போர் விமானங்களை அனுப்பி எல்லையில் தாக்குதல் முன்னெடுத்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு மந்திரி குற்றம் சாட்டியுள்ளார்.
இதனிடையே, பெலாரசின் போர் விமானங்கள் உக்ரைன் மீது தாக்குதலில் ஈடுபட்டு வரும் வேளையில், அதிபர் புதின் அந்நாட்டு அதிபருடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பின்போது, செய்தியாளர்களிடம் பேசிய பெலாரஸ் அதிபர் லுகாஷென்கோ, உக்ரைன், டான்போஸ் மட்டுமன்றி பெலாரஸ் மீது தாககுதல் நடத்த திட்டமிட்டுள்ளது. உக்ரைன் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள வரைபடங்கள் எங்களிடம் உள்ளன என்று தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது, செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் புதின், உக்ரைன் -ரஷியா இருதரப்பு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
ரஷிய அதிபர் புதினின் தீவிர ஆதரவாளரான அலெக்சாண்டர் லுகாஷென்கோ, 1991ம் ஆண்டு சோவித் ஒன்றியம் கலைக்கப்பட்ட காலகட்டத்திலிருந்தே ரஷியாவுடன் இணைந்தே செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக பெலாரசின் முக்கிய 3 வங்கிகளுடனான, ‘ஸ்விப்ட் நிதி பரிவர்த்தனை’ தொடர்பை ஐரோப்பிய ஒன்றியம் துண்டித்துள்ளது.மேலும், ரஷியா மீதான பொருளாதார தடைகள் போன்றே பெலாரஸ் மீதும் உலக நாடுகள் தடை விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் தலைநகரை கைப்பற்ற ரஷிய படைகள் தடுமாறி வரும் நிலையில், பெலாரஸ் தரப்பில் உக்ரைனுக்கு நெருக்கடியை ஏற்படுத்த ரஷியா முயன்று வருவதாக ரஷிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.