கோவை : உக்ரைன் ராணுவத்தில் இணைந்த கோவை இளைஞர் சாய் நிகேஷ், நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டம், துடியலூர் அருகேயுள்ள சுப்பிரமணியம்பாளையத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன்- ஜான்சி லட்சுமி தம்பதியர். இவர்களுக்கு சாய் நிகேஷ் (21), சாய் ரோகித் ஆகிய மகன்கள் உள்ளனர். இதில் சாய் நிகேஷ், கடந்த 2018-ம் ஆண்டு உக்ரைன் நாட்டில் கார்கிவ் நகரில் உள்ள நேஷனல் ஏரோஸ்பேஸ் பல்கலைக்கழகத்தில், ஏரோனாட்டிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தார். இறுதியாண்டில் படித்து வந்தார்.
இந்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா கடந்த மாதம் 24-ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து, அங்கு வசிக்கும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், பொதுமக்கள் அண்டை நாடுகள் வழியாக தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.
இதற்கிடையே, உக்ரைன் நாட்டில் வசிக்கும் மக்கள் விருப்பம் இருந்தால், உக்ரைன் ராணுவத்தில் இணைந்து பணியாற்றலாம் என அந்தநாட்டு அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து சாய்நிகேஷ் உக்ரைன் ராணுவத்தின், ‘ஜார்ஜியன் நேஷனல் லிஜியன்’ என்ற துணை ராணுவப் படையில் கடந்த மாதம் இணைந்தார்.
பெற்றோர் அதிர்ச்சி: இந்த தகவலை அவர் கோவையில் வசிக்கும் பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பள்ளிப்படிப்பை முடித்த பின்னர், இந்திய ராணுவத்தில் சேர விரும்பிய சாய் நிகேஷ், போதிய உயரம் இல்லாததால் நிராரிக்கப்பட்டார். இதனால், உயர் கல்விக்காக உக்ரைன் சென்றிருந்த சமயத்தில், அங்கு போர் ஏற்பட்டு அந்நாட்டு ராணுவத்தில் இணைய வாய்ப்பு வந்ததால், பின் விளைவுகளை அறியாமல் அவர் உக்ரைன் ராணுவத்தில் இணைந்தார் என அந்த சமயத்தில் கோவையில் உள்ள அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.
உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த சாய் நிகேஷை, அந்த பணியினை விட்டு விட்டு மீண்டும் கோவைக்கு திரும்பி வரும்படி அவரது பெற்றோர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். முதலில் அதற்கு அவர் மறுத்துவிட்டார்.
நாடு திரும்ப விருப்பம்: பின்னர், பெற்றோர் தங்களது உடல்நிலைக் காரணங்களை கூறி, கண்டிப்பாக திரும்பி வர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியதால், சாய் நிகேஷ் உக்ரைன் ராணுவத்தில் இருந்து விலகி மீண்டும் இந்தியாவுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக கோவையில் உள்ள அவரது குடும்பத்தினர் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும், சாய் நிகேஷ் குறித்த இத்தகவல் உளவுத் துறை அதிகாரிகள் மூலம் மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்கும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சாய் நிகேஷின் தந்தை ரவிச்சந்திரனிடம் கேட்டபோது,‘‘ மகனை மீட்டுத் தர அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். மகன் நல்லபடியாக வர வேண்டும். அதற்கு நீங்கள் ஒத்துழைப்பு கொடுங்கள். மற்ற விஷயங்கள் குறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை. இவ்விவகாரம் தொடர்பாக கருத்து கூற விரும்பவில்லை’’ என்றனர்.