சண்டிகர்: எம்எல்ஏக்கள் தங்களது தொகுதியில் நேரத்தை செலவிட வேண்டும்; அமைச்சர் பதவிக்காக ஏங்க வேண்டாம் என்று ஆம்ஆத்மி எம்எல்ஏக்களுக்கு முதல்வராக பொறுப்பேற்க உள்ள பகவந்த் மான் வேண்டுகோள் விடுத்தார். 117 உறுப்பினர்களைக் கொண்ட பஞ்சாப் சட்டமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களைக் கைப்பற்றி மாபெரும் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்து. ஆம்ஆத்மியின் முதல்வர் வேட்பாளரான பகவந்த் மான், துரி தொகுதியில் 58,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போதைய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, காங்கிரஸ் மாநிலத் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் உள்ளிட்ட தலைவர்களையும் ஆம் ஆத்மி கட்சி சூறையாடியது. பஞ்சாப்பின் புதிய முதல்வராக வரும் 16ம் தேதி பகவந்த் மான் பதவியேற்க உள்ளார். முன்னதாக நேற்று நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அவர் பேசுகையில், ‘எம்எல்ஏக்கள் அவரவர் தொகுதிகளில் அதிகபட்ச நேரத்தை செலவிட வேண்டும்; தலைநகர் சண்டிகரில் முகாமிட்டு இருக்க வேண்டாம். அமைச்சர் பதவிகளுக்காக ஏங்க வேண்டாம். வாக்கு கேட்கச் சென்ற எல்லா இடங்களுக்கும் செல்லுங்கள்; மக்களுக்காக உழைக்க வேண்டும். முதல்வர் மற்றும் 17 கேபினட் அமைச்சர்கள் எனது அமைச்சரவையில் இருக்கும். எம்எல்ஏக்கள் அனைவரும் கேபினட் அமைச்சர்கள் தான். ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்காதவர்களுக்காகவும் பணியாற்ற வேண்டும். ஆணவம் ெகாள்ள வேண்டாம் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் பஞ்சாப் மக்களின் எம்எல்ஏக்கள்; மக்கள் தான் உங்களை தேர்ந்தெடுத்துள்ளனர்’ என்று உருக்கமாக பேசினார். முன்னதாக பஞ்சாப் வெற்றிச் செய்தியுடன் நேற்று டெல்லி வந்த பகவந்த் மான், கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்தித்து ஆசி பெற்றார். வரும் 16ம் தேதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவுக்கு டெல்லி முதல்வருக்கும் அவர் அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.