உத்தரப்பிரதேச தேர்தல் :
இந்தியாவின் மிகப் பெரிய மாநிலம் உத்தரப்பிரதேசம். இந்த மாநிலத்தில் மட்டும் 403 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக கூட்டணி 312 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி 47 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 17 இடங்களிலும், அப்னா தளம் (சோனேலால்) ஒன்பது இடங்களிலும், இந்திய தேசிய காங்கிரஸ் ஏழு இடங்களிலும் வெற்றிபெற்றிருந்தது. பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தது.
உத்தரப்பிரதேச சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் மே 14-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து இந்த மாநிலத்துக்கான தேர்தல் பிப்ரவரி மாதம் 10-ம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் முடிந்து, பாஜக 255-இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. சமாஜ்வாடி கட்சி 111 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. மேலும், பகுஜன் சமாஜ்(1), காங்கிரஸ் (2) போன்ற கட்சிகள் மிகவும் சொற்பனமா இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் உத்தரபிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்திருக்கிறது.
சமாஜ்வாடியின் வீழ்ச்சி:
உத்தரப்பிரதேசத்தில் ஒருபுறம் பாஜக வளர்ச்சி அடைந்தாலும், அதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுவது, அந்த மாநிலத்தின் பிரதான கட்சியான சமாஜ்வாடியின் வீழ்ச்சி தான். அகிலேஷ் யாதவ் 2000-ம் ஆண்டு தொடங்கி உத்தரப்பிரதேசத்திலிருந்து மூன்று முறை மக்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர். இவர் தந்தை முலாயம் சிங் யாதவ் சமாஜ்வாடி கட்சியின் தேசிய தலைவர் ஆவர். 2012-ம் ஆண்டு நடைபெற்ற உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவ் ஆகியோரின் சூறாவளி பிரசாரம் காரணமாக சமாஜ்வாடி கட்சி 224 இடங்களைக் கைப்பற்றியது. பெரும் வெற்றிக்குப் பிறகுத் தனது 38 வயதில் உத்தரப்பிரதேச முதல்வராகப் பதவியேற்றார் அகிலேஷ் யாதவ். அறுதி பெரும்பான்மை இருந்ததால், முலாயம் சிங் யாதவ், தனது மகனை எதிர்ப்புகள் இன்றி முதல்வர் ஆக்கினார்.
கடந்த 2017-ம் ஆண்டு ஆட்சி முடியும் தறுவாயில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பில் பெரும் சர்ச்சை கிளம்பியது. சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் 325 பேர் கொண்ட பெயர் பட்டியலை வெளியிட்டார். அந்த பட்டியலில் அகிலேஷின் ஆதரவாளர்கள் பெயர் மிகக் குறைவாக இருந்ததையடுத்து, அகிலேஷ் யாதவ் தன்னிச்சையாக ஒரு பெயர் பட்டியலை வெளியிட்டார். அடுத்தடுத்து நடந்த சில சம்பவங்களினால் தந்தை, மகனிடையே கருத்துவேறுபாடு அதிகரிக்க, அகிலேஷ் யாதவை ஆறு ஆண்டுகள் கட்சியிலிருந்து நீக்குவதாக முலாயம் சிங் யாதவ் அறிவித்தார்.
2017-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்:
இந்த நடவடிக்கைக்கு பதில் தரும் விதமாக, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தன்னை சமாஜ்வாடி கட்சியின் தேசிய தலைவராக அறிவித்தார் அகிலேஷ். அதோடு, முலாயம் சிங் யாதவை கட்சியிலிருந்து ஆறு ஆண்டுகள் நீக்குவதாகவும் அறிவித்தார். இந்த போக்கு நீடித்தால் அது கட்சியைப் பாதிக்கும் என்று பல தலைவர்களும் சமாதானம் செய்துவைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு கட்சியும், சின்னமும் அகிலேஷின் கைக்கு வந்தது. இந்த சம்பவம் நடந்தது எல்லாமே 2017-ம் ஆண்டு உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தான். சமாஜ்வாடி கட்சியில் நடந்த குழப்பம் அந்தாண்டு நடைபெற்ற தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
2012-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 224 இடங்களைக் கைப்பற்றி பெரும் செல்வாக்கோடு இருந்த சமாஜ்வாடி கட்சி, 2017-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தது. இருந்தபோதிலும், அந்த தேர்தலில் சமாஜ்வாடி வெறும் 47 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. அந்த தேர்தலில் பாஜக மட்டும் 312 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது. மேலும், முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 19 இடங்களிலும், காங்கிரஸ் 7 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. இந்த பெரும் தோல்விக்குப் பிறகு உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியை மறுகட்டமைப்பு செய்யும் பணியும் தீவிரமாக ஈடுபட்டிருந்தார் அகிலேஷ்.
மீண்டும் தலை தூக்கும் சமாஜ்வாடி:
தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 403 இடங்களில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பாஜக 376 இடங்களிலும், நிசாத் கட்சி 15 இடங்களிலும், அப்னா தளம் (சோனேலால்) 12 இடங்களிலும் தேர்தலைச் சந்தித்துள்ளது. அதேசமயம், சமாஜ்வாடி கட்சி ஏழு கட்சிகளுடன் கூட்டணி வைத்துத் தேர்தலைச் சந்தித்தது. 343 இடங்களில் போட்டியிட சமாஜ்வாடி கட்சி தற்போது 111 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் கடந்த தேர்தலில் சமாஜ்வாடி கட்சி இழந்த செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளார் அகிலேஷ் யாதவ் என்கிறார்கள். இதன் மூலம் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பிடித்துள்ளது சமாஜ்வாடி.
உத்தரப்பிரதேசத்தில் மட்டும் மொத்தம் 80 மக்களவை தொகுதிகள் உள்ளன. கடந்த தேர்தல்களை விட இந்த தேர்தலில் பாஜக குறைவான இடங்களையே கைப்பற்றியுள்ளது. இருந்தபோதிலும், போதிய இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், வரவுள்ள 2024-ம் ஆண்டு தேர்தலில், சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி வைத்து இடங்களைக் கைப்பற்ற பல்வேறு கட்சிகளும் முயற்சி செய்யும். அப்படி ஒரு வலுவான கூட்டணி அமையும்பட்சத்தில் கண்டிப்பாக அது தேர்தல் முடிவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அந்த கூட்டணி யாருடன் என்பது தான் தேர்தல் நெருங்கும் சமயத்தில் தான் தெரியவரும். பொறுத்திருந்து பார்க்கலாம்.