புதுடெல்லி: மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா மற்றும் உ.பி. விவசாயிகள் டெல்லி எல்லைகளில் ஓராண்டாக போராட்டம் நடத்தினர்.
உ.பி.யில் மகா பஞ்சாயத்துகள் நடத்தி பாஜகவுக்கு எதிராக ஆதரவும் திரட்டப்பட்டது. கரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங் களால் சுமார் 700 விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்தனர். இதையடுத்து, மத்திய அரசு தனது வேளாண் சட்டத் திருத்தங்களை கடந்த ஆண்டு தேர்தலுக்கு சற்று முன்பாக, திடீரென வாபஸ் பெற்றது.
இதன் தாக்கம், பாஜகவுக்கு உ.பி. தேர்தலில் பெரும் இழப்பைஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மொத்தமுள்ள 403 இடங்களில் 273–ல் வென்று ஆட்சியை தக்க வைத்த பாஜகவுக்கு பெரிய இழப்பு எதுவும் ஏற்படவில்லை.
குறிப்பாக விவசாயிகளில் ஜாட் சமூகத்தினர் அதிகம், வாழும்மேற்கு உ.பி.யில் பாஜக கணிசமான தொகுதிகளை பெற்றுள்ளது.மேற்கு உ.பி.யின் 13 மாவட்டங்களில் உள்ள 68 தொகுதிகளில் பாஜக 44-ல் வென்றுள்ளது. இதில், அலிகர் மற்றும் புலந்த்ஷெஹரில் தலா 7 தொகுதிகளிலும் பாஜக வென்றுள்ளது.
மதுராவில் 5 தொகுதி
நொய்டா அமைந்த கவுதம்புத்நகர் மற்றும் ஹாபூரில் தலா 3, காஜியாபாத் மற்றும் மதுராவில் தலா 5 என அனைத்து தொகுதிகளை பாஜக தக்க வைத்துக்கொண்டது. இதர மாவட்டங்களான முசாபர் நகரில் 6-ல் 2, மீரட்டில் 7-ல் 3,சஹரான்பூரில் 7-ல் 5, பாக்பத்தில் 3-ல் 2, பிஜ்னோரில் 8-ல் 4, முராதாபாத்தில் 5-ல் 1, ராம்பூரில் 5-ல்2, அம்ரோஹாவில் 4-ல் 2, சம்பலில் 4-ல் 1 என பாஜக வெற்றி பெற்றுள்ளது. முசாபர் நகருடன் இணைந்த மாவட்டமான ஷாம்லியில் மட்டும் 3 தொகுதிகளில்ஒன்றில் கூட பாஜகவால் வெல்லமுடியவில்லை.
டெல்லி விவசாயிகள் போராட் டத்தின் போது, உ.பி.யின் லக்கிம்பூர்கேரியில் போராடக் கிளம்பியவர்கள் மீது கார் ஏறி ஒரு பத்திரிகையாளர் உள்ளிட்ட 5 விவசாயிகள் உயிரிழந்தனர். இந்த வழக்கில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன்ஆஷிஷ் மிஸ்ரா கைதானார்.
இவருக்கு லக்கிம்பூர்கேரியின் வாக்குப் பதிவுக்கு சற்று முன்பாகஜாமீன் கிடைத்தது. இதனால், லக்கிம்பூர்கேரியின் 7 தொகுதியிலும் பாஜகவுக்கு தோல்வி எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கு ஒன்றில் கூட பாஜக தோல்வி அடையவில்லை.
எனவே டெல்லி போராட்டத்தால் புதிய வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டு, விவசாயிகளுக்கு வெற்றி கிடைத்தது. அதேசமயம் இவர்கள் எதிர்த்த பாஜகவுக்கும் உ.பி. தேர்தலில் வெற்றி கிடைத் துள்ளது.