உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறை போட்டியிட்டு வென்ற எம்எல்ஏ பதவியை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்ட அகிலேஷ் யாதவ், கர்ஹால் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் எஸ்பி சிங் பாகெலை அகிலேஷ் 67 ஆயிரத்து 504 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார். இதற்குமுன் அவர் முதல்வராக இருந்தபோதிலும் மேல்சபை உறுப்பினராக இருந்தார். இந்நிலையில், நேரடி தேர்தலில் முதல்முறை போட்டியிட்டு வென்ற எம்எல்ஏ பதவியை அகிலேஷ் யாதவ் ராஜினாமா செய்யவுள்ளதாக லக்னோவில் கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி பெரும்பான்மை பெறாத நிலையில் ஆட்சி அமைக்கப் போவதில்லை என்று கூறிய கட்சிப் பிரமுகர், மக்களவை எம்.பி.யாக இருக்கும் அகிலேஷ் யாதவ் அதே பதவியில் நீடிக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.
எனவே, கர்ஹால் எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்யும் அறிவிப்பு கட்சி சார்பில் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகக்கூடும் என்றும் சமாஜ்வாதி கட்சிப் பிரமுகர் தெரிவித்தார். உத்தரப் பிரதேசத்தின் 403 தொகுதிகளில் 111 தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி வென்று பலமான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக அகிலேஷ் யாதவ் இடம்பெற வாய்ப்புள்ள நிலையில், அவர் அதை ஏற்பாரா அல்லது தேசிய அரசியலை தேர்வு செய்வாரா என விரைவில் தெரியவரும்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM