”எங்கள் வார்ட்டில் அடிக்கடி கட்சிக் கூட்டங்கள் நடக்கும். அதனை நான் சிறுவயதிலிருந்தே கவனித்து வந்திருக்கிறேன். அவ்வாறுதான் எனக்கு அரசியல் ஆர்வம் வந்தது” என்கிறார் தாம்பரம் மாநகராட்சியின் முதல் மேயராக பதவியேற்றுள்ள க.வசந்தகுமாரி.
கல் உடைக்கும் தொழிலாளியின் மகள் வசந்த குமாரி. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையடுத்து தாம்பரம் மாநகராட்சியின் முதல் மேயர், தமிழகத்தின் இளம்வயது மேயர் என்ற பெருமைக்குரியவராகியுள்ளார். அடித்தட்டு குடும்பத்திலிருந்து வந்துள்ளதால் வசந்தகுமாரியின் பார்வையும், பேச்சும் அம்மக்களை நோக்கியதாகவே உள்ளது. ’இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்காக, 25 வயதாகும் தாம்பரம் மேயர் க.வசந்தகுமாரியுடன் பேசினேன். அந்த உரையாடல், இதோ:
* தாம்பரம் மாநகராட்சியின் முதல் மேயராக எப்படி உணர்கிறீர்கள்?
”தாம்பரம் மாநகராட்சியின் முதல் மேயராகவும், தமிழகத்தின் இளம் மேயராகவும் தேர்தெடுக்கப்பட்டுள்ளேன். இந்த வாய்ப்பளித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத்தான் நன்றி கூற வேண்டும். கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கு நன்றி கூற கடமைபட்டுள்ளேன். மிகப் பெரிய பொறுப்பை என்னை நம்பி கட்சித் தலைமை ஒப்படைத்துள்ளது. அதனை சீர்மிகு வழியில் செயல்படுத்த கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறேன்.”
* உங்கள் குடும்பம் பற்றி…
”நான் பிடெக் கெமிக்கல் இன்ஜினீயரிங் படித்துள்ளேன். எங்கள் குடும்பத்தில் யாரும் இதுவரை படிக்கவில்லை. நான்தான் முதல் தலைமுறை பட்டதாரி. அப்பா 40 வருடமாக அரசியலில் இருக்கிறார். கல் உடைப்பதுதான் என் அப்பாவின் பிரதான தொழில். எங்கள் குடும்பத்தில் பலரும் கல் உடைக்கும் தொழிலைத்தான் செய்கிறார்கள். என் பெரியப்பா தசரதன் திமுகவின் பிரதிநிதியாக இருந்தார். அவர்தான் எங்கள் குடும்பத்திற்கு அரசியல் வழிகாட்டி.”
* அரசியல் ஆர்வம் எப்போதிலிருந்து வந்தது…
”நான் 18 வயது முதலே அரசியலில் இருக்கிறேன். கடந்த மூன்று ஆண்டுகளாகவே தாம்பரம் 1-வது பகுதி திமுக தகவல் தொழில் நுட்ப அணியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தேன். தற்போது அந்தப் பொறுப்பில் நீடிக்கிறேன். நான் சந்தித்த முதல் தேர்தல் இது. எங்கள் வார்ட்டில் அடிக்கடி கட்சி கூட்டங்கள் நடக்கும். அதனை நான் சிறுவயதிலிருந்தே கவனித்து வந்திருக்கிறேன். அவ்வாறுதான் எனக்கு அரசியல் ஆர்வம் வந்தது. எங்கள் பகுதியில் நடக்கும் அரசியல் கூட்டங்கள் எம்பி டி.ஆர்.பாலு அடிக்கடி வந்து உரையாற்றுவார். அவரது பேச்சைக் கேட்டுதான் கட்சியின் மீது ஆர்வம் அதிகரித்தது.”
* மேயர் பதவி வழங்குவார்கள் என்று நினைத்தீர்களா..?
”மேயர் பதவி எல்லாம் நினைத்து தேர்தலில் நிற்கவில்லை. தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு 32- வது வார்டு சார்ப்பில் அப்பாவும், நானும் விருப்ப மனு தாக்கல் செய்தோம். இதில் அப்பாவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பா பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கிவிட்டார். இதற்கிடையில் விருப்ப மனு மறுபரிசீலனை செய்யும்போது மாவட்ட செயலாளர்கள் நான் நன்கு படித்திருப்பதை பார்த்து எனக்கு வாய்ப்பளித்தார்கள். இதில் எந்த வருத்தமும் தெரிவிக்காமல் அப்பா எனக்காக விட்டுக் கொடுத்தார்.”
*உங்கள் வெற்றி குறித்த பகுதி மக்களின் பார்வை…
”நம்ம ஊர் பொண்ணு மேயராக வேண்டும் என்றுதான் அவர்கள் விரும்பினார்கள். அவர்களின் விருப்பமே நடத்திருக்கிறது. என்னால் முடிந்தளவு மேயராக அனைத்து கடமைகளையும் செய்வேன்.”
*உள்ளாட்சி தேர்தல்களை பொறுத்தவரை, பெண்கள் வாக்கு அரசியலுக்காக வேட்பாளராக முன்னிறுத்தப்படுகிறார்கள், அவர்கள் வெறும் கைப்பாவைகளே என்ற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில்…
”இதில் நிச்சயம் எனக்கு உடன்பாடில்லை. எனது பாதுகாப்புகாக மட்டும்தான் என் அப்பாவும், கணவரும் என் அருகில் இருக்கிறார்கள். முடிவுகளை தீர்மானிப்பதற்கில்லை. எதிலும் அவர்கள் தலையிட்டது இல்லை. அனைத்து முடிவுகளையும் நானே எடுக்கிறேன். கட்சியும் முழு சுதந்திரத்தையும், ஒத்துழைப்பையும் வழங்கி இருக்கிறது என்று உறுதியாக கூறுவேன்.”
* உங்கள் தொகுதியின் முக்கிய பிரச்சினையாக நீங்கள் பார்ப்பது… அதற்காக என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?
”எனது முதல் கடமை திடக்கழிவு மேலாண்மையை சீர் செய்வதுதான். பகுதியில் மட்கும் குப்பை, மட்காத குப்பை என்று மக்களிடத்தில் பொது விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தாம்பரத்தில் ஒரு நாளைக்கு 360 டன் குப்பைகள் சேர்கிறது. இதில் 100 டன்களை நாங்கள் உரமாக்குகிறோம். இந்த உரங்களை விவசாயிகளுக்கும் வழங்கி இருக்கிறோம்.
வரும் நாட்களில் குப்பைகளை மட்கும் குப்பை, மட்காத குப்பை என பிரித்து அவற்றை மறு பயன்பாடு செய்ய வேண்டும். இதுதான் எங்கள் இலக்கு. இதனை அதிகாரிகளின் துணையோடு செய்து கொண்டிருக்கிறோம். தற்போதுவரை எனக்கு வந்த கோரிக்கை வைத்துப் பார்த்ததில் மக்களின் பிரதான பிரச்சனையாக சாலை, குடிநீர் வசதி, தெருவிளக்கு பிரச்சினை உள்ளன. 80% மக்கள் இதனைதான் முன் வைக்கிறார்கள். மெட்ரோ லாரிகளில் வரும் தண்ணீரைதான் இங்குள்ள மக்கள் குடிக்கிறார்கள். அதனை நம்பிதான் இருக்கிறார்கள்.லாரி வரவில்லை என்றால் அந்த நாளே அவர்களுக்கு பாழாகிவிடும். கேன் தண்ணீரை வாங்கிக் கொள்ள முடியாத அளவு வறுமைக் கோட்டின் கீழுள்ள மக்கள் இப்பகுதியில் அதிகம் வாழ்கிறார்கள். இதுதான் தாம்பரத்தின் பிரதான பிரச்சனை. இதனை தீர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.”
* இம்முறை நிறைய பெண்களுக்கு மேயர் பதவியை திமுக வழங்கியுள்ளது. அதனை எப்படி பார்க்கிறீர்கள்..?
”பெண் சமூகத்துக்கு கிடைத்த ஒரு முன்னேற்றம்தான் இது. பெண்கள் எல்லா துறைகளிலும் சாதித்துள்ளார்கள். ஆனால், அரசியலில் குறைவான எண்ணிகையில்தான் பெண்கள் வருகிறார்கள். பெண்கள் அரசியலுக்கு வருகிறார்கள் என்றால், அவர்கள் குடும்பமும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். 11 பெண்கள் மேயர்களாக தேர்தெடுக்கப்பட்டுள்ளது நம் பெண் சமூகத்துக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி.”
* உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர்…
”கலைஞர் கருணாநிதி. அரசியல் மட்டுமல்லாது அவருடைய இலக்கிய பேச்சுகள் எனக்கு மிகவும் பிடித்தவை. என்னுடைய பிரச்சாரத்துக்கு அவரது பேச்சுகள்தான் உதவியது.”
* பெண் தலைவர்…
”மேற்கு வங்க முதல்வர் மம்தா பனர்ஜி மிகவும் பிடிக்கும். பெண்கள் எவ்வளவு துணிச்சலாக இருக்க வேண்டும் என்பதற்கு அவர் ஒரு எடுத்துக்காட்டு.”
* அடுத்த 5 வருடங்களுக்கு உங்கள் இலக்கு என்னவாக உள்ளது?
”தாம்பரம் இப்போது மாநகராட்சியாக தனது முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறது. சென்னைக்கு சமமான மாற்றத்தைக் கொண்டுவர இன்னும் காலம் தேவைப்படுகிறது. எனினும் சென்னைக்கு அடுத்து அனைவரது பார்வையும் தற்போது தாம்பரத்தின் மீது உள்ளது. மக்கள் எதனை எதிர்பார்கிறார்களோ, அதனை நாங்கள் பூர்த்தி செய்வோம். செய்யும் அனைத்து செயலும் மண்ணிற்கும், மக்களுக்கு பயனுள்ளதாகவே இருக்கும்.”
தொடர்புக்கு: [email protected]