உத்தரப் பிரதேச மாநிலத்தில்
காங்கிரஸ்
கட்சி 399 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் 387 தொகுதிகளில் அக்கட்சிக்கு டெபாசிட் பறி போயுள்ளது கட்சி மேலிடத்தை அதிர வைத்துள்ளது. டெபாசிட்டைக் கூட திரும்பப் பெற முடியாத அளவுக்கு காங்கிரஸின் நிலைமை மோசமாக இருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
ஒரு காலத்தில் உத்தரப் பிரதேசத்தை கட்டி ஆண்ட கட்சி காங்கிரஸ். அப்போது ஒருங்கிணைந்த உத்தரப் பிரதேச மாநிலமாக அது இருந்தது. அத்தனை பெரிய மாநிலத்தை ஜஸ்ட் லைக் தட் ஆட்சி புரிந்து வந்தது காங்கிரஸ். ஆனால் இன்று எறும்பு போல சுருங்கிப் போய்க் கிடக்கிறது. டெபாசிட் தொகையைக் கூட பெற முடியாத அளவுக்கு படு மோசமான மரணப் படுக்கையில் அக்கட்சி கிடக்கிறது.
உத்தரப் பிரதேசத்தில் போட்டியிட்ட நான்கு பெரிய கட்சிகளில் பாஜக – சமாஜ்வாதி இடையே தான் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டி இருந்துள்ளது. மற்ற இரு பெரிய கட்சிகளான பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் ஆகியவை எந்த தொகுதியிலும் சீனிலேயே இல்லை. இரு கட்சிகளும் சேர்ந்து மொத்தமே 3 தொகுதிகளில்தான் (காங்கிரஸ் 2, பகுஜன் 1) ஜெயித்துள்ளன.
உ.பி. தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தம் 399 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் 387 தொகுதிகளில் டெபாசிட்டைப் பறி கொடுத்துள்ளது. 2 இடங்களில் மட்டும் வென்றது. பகுஜன் சமாஜ் கட்சி 403 தொகுதிகளிலும் போட்டியிட்டது. அதில் 290 தொகுதிகளில் டெபாசிட்டைப் பறி கொடுத்தது. பாஜக 376 தொகுதிகளில் போட்டியிட்டது. 3 தொகுதிகளில் மட்டும் டெபாசிட் இழந்தது. சமாஜ்வாதி கட்சி 347 தொகுதிகளில் போட்டியிட்டது. 6 தொகுதிகளில் மட்டும் டெபாசிட்டைப் பறி கொடுத்தது.
பாஜக கூட்டாளியான அப்னாதளம் எஸ், நிஷாத் கட்சி ஆகியவை தாங்கள் போட்டியிட்ட 27 தொகுதிகளிலும் ஒறு தொகுதியில் கூட டெபாசிட் இழக்கவில்லை என்பது ஆச்சரியமானது. சமாஜ்வாதி கூட்டாளியான அப்னாதளம் கே, எஸ்பிஎஸ்பி ஆகிய கட்சிகள் 25 தொகுதிகளில் போட்டியிட்டு, 8ல் டெபாசிட்டைப் பறி கொடுத்தன.
காங்கிரஸ் கட்சி கடந்த 2017 சட்டசபைத் தேர்தலில் 6 இடங்களில் வென்றது. இந்த முறை 2 வெற்றி மட்டுமே. வாக்கு சதவீதமும் 2.4 சதவீதமாக அடியோடு இறங்கிப் போய் விட்டது. கடந்த முறை 6.1 சதவீத வாக்குகளை காங்கிரஸ் கட்சி பெற்றிருந்தது நினைவிருக்கலாம்.
நேரு – காந்தி குடும்பத்து தொகுதிகளாக கருதப்படும் ரேபரேலி, அமேதி ஆகியவற்றிலும் கூட காங்கிரஸ் கட்சியால் வெல்ல முடியவில்லை என்பது காங்கிரஸாரை பெரும் சோகத்துக்குள்ளாக்கியுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் எப்படி அடுத்து வரும் லோக்சபா தேர்தலை காங்கிரஸ் சந்திக்கப் போகிறது என்பது மலைப்பாக இருக்கிறது.