ஹாமில்டன்,
12-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) நியூசிலாந்தில் நடந்து வருகிறது. அதில் வெஸ்ட்இண்டீஸ் அணி தனது முந்தைய ஆட்டங்களில் நியூசிலாந்து, இங்கிலாந்தை வீழ்த்தி வலுவான நிலையில் இருந்தது. இந்திய அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை பந்தாடியது. அடுத்த ஆட்டத்தில் நியூசிலாந்திடம் ‘சரண்’ அடைந்தது.
இந்நிலையில் ஹாமில்டனில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, ஸ்டாபானி டெய்லர் தலைமையிலான வெஸ்ட்இண்டீசுடன் மோதியது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணியின் சார்பில் முதலாவதாக ஸ்மிருதி மந்தனா மற்றும் பாட்டியா ஆகியோர் களமிறங்கினர். அதிரடியாக துவங்கிய இந்த ஜோடியில் யாஷிகா பாட்டியா 31 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து கேப்டன் மிதாலி ராஜ் 5 ரன்களும், தீப்தி சர்மா 15 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினர்.
அடுத்ததாக ஹர்மன்பீரித் கவுர், மந்தனாவுடன் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடிய இந்த ஜோடியால் அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது. இந்த ஜோடியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய மந்தனா 123 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து களமிறக்கிய கோஷ் 5 ரன்களும், பூஜா 10 ரன்களும், கோஸ்வாமி 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதனிடையே துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹர்மன்பீரித் கவுர், தனது சதத்தை பதிவு செய்து அசத்தினார். தொடர்ந்து ஆடிய அவர் 109 ரன்களில் வெளியேறினார்.
முடிவில் ராணா 2 ரன்களும், மேக்னா சிங் 2 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதன்படி இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 317 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக அனிஷா முகமது 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன்மூலம் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 318 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.