அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கள்ள ஓட்டுப் போட்டதாகச் சொல்லப்படும் திமுக பிரமுகரைத் தாக்கி அரை நிர்வாணமாக்கியது, அரசு உத்தரவை மீறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது மற்றும் ரூ. 5 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்தது என அடுத்தடுத்து மூன்று வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டிருந்தார்.
இதில், திமுக பிரமுகரைத் தாக்கியது, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது போன்ற வழக்குகளில் மட்டும் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஜெயக்குமார், நில அபகரிப்பு வழக்கிலும் ஜாமீன் கேட்டு மனு அளித்திருந்தார்.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு உயர் நீதிமன்றம் மூன்றாவது வழக்கிலும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மேலும், திருச்சியில் 2 வாரம் தங்கியிருந்து கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் வாரம் 3 முறை கையெழுத்திட வேண்டும் என்றும் ஜெயக்குமாருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, ஜாமீனில் வெளியே வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “கைது செய்த உடன், சிறைக்கு அழைத்துச் செல்லாமல் 3 மணி நேரம் சென்னையை சுற்றி காண்பித்தார்கள்.
மேலும், சென்னை பூந்தமல்லி சப்-ஜெயில் என்பது பொடா, தடா வழக்கில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் அடைக்கப்படும் சிறை. அங்கு தான் என்னை அடைத்தார்கள். குடிக்கத் தண்ணீர் இல்லாமல், வெறும் தரையில் படுத்திருந்தேன். ஆனால் இந்த பூச்சாண்டிக்கெல்லாம் அ.தி.மு.க பயப்படாது” எனத் தெரிவித்தார்.