நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காணிக்கைராஜ் நகர் பகுதியில் உள்ள வீட்டின் கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்த காட்டெருமை உயிருடன் மீட்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதி அடர்ந்த வனங்கள் சூழ்ந்த பகுதி ஆகும். இந்த வனங்களில் சிறுத்தை, கரடி, காட்டெருமை, யானை போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. தற்போது கோடைகாலம் என்பதால் குடிநீர் மற்றும் உணவுக்காக குடியிருப்பு பகுதியில் இந்த வன லிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் அருவங்காடு அருகே உள்ள காணிக்கைராஜ் நகர் பகுதியில் ஜார்ஜ் என்பவர் வீட்டு அருகே கழிவுநீர் தொட்டியில் ஏழு வயது மதிக்கத்தக்க ஆண் காட்டெருமை கால் இடரி கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்தது உடனடியாக அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து விரைந்து வந்த வனத்துறை மற்றும் குன்னூர் தீயணைப்புத் துறையினர் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு கழிவுநீர் தொட்டியில் விழுந்த காட்டெருமையை உயிருடன் மீட்டு வனப்பகுதிக்குள் விரட்டினர். குடியிருப்புப் பகுதியில் இதுபோன்று அடிக்கடி சுற்றி வரும் காட்டெருமைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM