டெல்லி: கொரோனாவுக்கு இந்தியாவில் 41 லட்சம் பேர் பலியாகி உள்ளதாக பிரபல மருத்துவ ஆய்வு இதழான லான்செட் இதழில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்திய அரசு மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது.
இது உலகின் பழமையான மற்றும் மிகவும் பிரபலமான பொது மருத்துவ இதழ்களில் ஒன்று லான்செட். இதற்கு லண்டன், நியூயார்க் மற்றும் பெய்ஜிங் கிளைகள் உள்ளன. மருத்துவம் குறித்த தகவல்களை மதிப்பாய்வு செய்து, வெளியிட்டு வருகிறது. 1823 ஆம் ஆண்டில் தாமஸ் வாக்லே என்ற ஆங்கில அறுவை சிகிச்சை நிபுணரால் நிறுவப்பட்டது, தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இந்த வாராந்திர இதழில் வரும் ஆய்வு கட்டுரைகள் பிரசித்தி பெற்றவை.
இந்த நிலையில், சமீபத்தில் லான்செட் இதழில் வெளியாகி உள்ள கொரோனா தொற்று குறித்த ஆய்வறிக்கை இந்தியாவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இணைநோய்களால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும், அவர்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும் என்று லான்செட் மருத்துவ இதழ் ஆய்வறிக்கை கடந்த ஆண்டு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது, இந்தியாவில் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்த தகவலை வெளியிட்டு சலசலப்பை உண்டாக்கி உள்ளது.
இந்தியாவில் இன்று காலை 8மணி வரையிலான நிலவரப்படி, இதுவரை 4,29,87,875 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,15,803 (ஐந்து லட்சத்து 15 ஆயிரத்து 803) என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஆனால் லான்செட் ஆய்வு இதழ் இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் அரசு அறிவித்ததை காட்டிலும் 8 மடங்கு அதிகம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2020, 2021 ஆகிய 2 ஆண்டுகளிலும் இந்தியாவில் கொரோனாவுக்கு சுமார் 41 லட்சம் பேர் பலியானார்கள் என்று தெரிவித்துள்ள லான்செட் மருத்துவ இதழ்.
லான்செட் இதழின் அறிக்கை சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்தியஅரசு, அதை மறுத்து விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் முறையாக பதிவு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளதுடன், உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஏற்பவே செயல்பட்டு வருகிறோம் என்று கூறி உள்ளது.
இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு குறித்து சர்வதேச பத்திரிகையில் வெளியான தகவல் முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றது, பொய்யானது, இது திட்டமிட்டு, மக்களை திசை திருப்பும் முயற்சி என்றும் கண்டித்துள்ளது.