வாஷிங்டன்:’கொரோனா தொற்று பரவத் துவங்கிய இரண்டு ஆண்டுகளில், உலகம் முழுதும் ஒரு கோடியே 82 லட்சம் பேர் இறந்திருக்கக் கூடும்’ என ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.
பெரும் பாதிப்பு
கொரோனா தொற்று கடந்த 2019 டிசம்பரில், சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவத் துவங்கியது. இது, உலகம் முழுதும் பரவி, பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த தொற்றுக்கு, உலகம் முழுதும் 60 லட்சம் பேர் உயிரிழந்ததாக சமீபத்தில் வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று தெரிவித்தது. ஆனால், போதிய பரிசோதனை வசதிகள் இல்லாததாலும், தடுப்பூசிகள் கிடைக்கப் பெறாத காரணங்களாலும், பல்வேறு நாடுகளிலும் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை முழுமையாக வெளியாகவில்லை என்ற கருத்தும் நிலவுகிறது.
இந்நிலையில், கொரோனாவால் ஏற்பட்ட மரணங்கள் குறித்து, வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் குறித்து, அந்த பல்கலைக் கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டிற்கான துறையின் இயக்குனர் கிறிஸ்டபர் முரே கூறியதாவது:
22 சதவீதம்
கடந்த 1918ல் பரவிய, ‘ஸ்பானிஷ் ப்ளூ’ தொற்றால், ஐந்து கோடி பேர் உயிரிழந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. அதற்கு பின், கொரோனாவால் உலக அளவில் மிகப் பெரிய எண்ணிக்கையில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த உயிரிழப்புகள், அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகம் இருக்கும் என தோன்றுகிறது.
தொற்று பரவத் துவங்கிய இரண்டு ஆண்டுகளில், 1.82 கோடி பேர் உலகம் முழுதும் உயிரிழந்திருக்கலாம். இந்தியாவில் மட்டும் 41 லட்சம் பேர் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது. அதிக மக்கள் தொகை உடைய நாடு என்பதால், உலக அளவிலான உயிரிழப்புகளில் 22 சதவீதம் இந்தியாவில் ஏற்பட்டிருக்கக் கூடும்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement