கோவில் சொத்துக்களை வாடைகைக்கு விடும் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை அறநிலையத்துறை வெளியிடுள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்படுள்ளதாவது,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுரையின்படி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான அசையா சொத்துக்களுக்கு நியாய வாடகை நிர்ணயம் செய்யும்போது திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
நியாய வாடகை நிர்ணயம் செய்வது தொடர்பாக பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து வழங்கப்பட்ட அறிவுரைகளில் வாடகை நிர்ணயக் குழுவால் நிர்ணயம் செய்யப்படும் வாடகையினை கணக்கீட்டுத்தாளுடன் வாடகைதாரர்களுக்கு அனுப்பி, அவர்களது ஆட்சேபனைகளை பெற்று பரிசீலித்து, இறுதியான வாடகை நிர்ணய உத்தரவினை வாடகைதாரருக்கு வழங்கி ஒப்புதல் பெற வேண்டும்.
மேலும், நியாய வாடகை நிர்ணயம் செய்வதற்காக வாடகைதாரர் விவரம், சொத்தின் விவரம், சொத்தின் பரப்பளவு, சொத்தின் வகைப்பாடு மற்றும் பயன்பாடு (மனை/ கட்டிடம், குடியிருப்பு/வணிகம்), சொத்தின் மதிப்பு ஆகிய விவரங்களை உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட அறநிறுவனத்தின் செயல் அலுவலர், அறங்காவலர், அறங்காவலர் குழுத்தலைவர் அறிக்கை அனுப்ப வேண்டும்.
முதன்முதலாக வாடகை நிர்ணயம் செய்து பொது ஏலத்தில் வாடகைக்கு விடப்படும் சொத்துக்களுக்கு நியாய வாடகை நிர்ணயக்குழுவின் மூலம் வாடகை நிர்ணயம் செய்து உரிய உத்தரவினை சம்பந்தப்பட்ட அற நிறுவனத்தின் செயல் அலுவலர், அறங்காவலர், அறங்காவலர் குழுத்தலைவர் பிறப்பித்தால் மட்டுமே போதுமானது.
இணை ஆணையரிடமிருந்து பெறப்பட்ட வாடகை கணக்கீட்டுத்தாள் மற்றும் நியாய வாடகை நிர்ணய குழுவின் தீர்மானம் ஆகியவற்றின் அடிப்படையில் வாடகையாக நிர்ணயிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள தொகையினை குறிப்பிட்டு அது குறித்து ஆட்சேபனைகள் ஏதுமிருப்பின் உரிய ஆதாரங்களுடன் 15 தினங்களுக்குள் எழுத்துப்பூர்வமாக ஆட்சேபனைகள் தெரிவிக்கும்படி வாடகைதாரர்களுக்கு அறிவிப்பு ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவஞ்சலில் அனுப்பப்பட வேண்டும்.
தற்போது, நடைமுறையில் உள்ள சந்தை வாடகை மதிப்பினை தீர்மானிக்க கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட சொத்துக் குறித்த விவரங்கள் மற்றும் வசூலிக்கப்படும் வாடகைக்கான ஆதாரம் பெற வேண்டும். பின்பற்ற வேண்டும் அறிக்கை மற்றும் ஆவணங்களை பரிசீலித்து, சம்பந்தப்பட்ட இணை ஆணையர் நியாய வாடகை நிர்ணய குழுவின் பரிசீலனைக்கு வைக்க வேண்டும். நியாய வாடகை நிர்ணயக்குழுவின் தீர்மான நகல் மற்றும் வாடகை கணக்கீட்டுத் தாள் ஆகியவற்றை இணை ஆணையர் ஒரு வார காலத்திற்குள் அனுப்ப வேண்டும்.
அனைத்து திருக்கோயில் இணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் அனைவரும் கோயில்களுக்குச் சொந்தமான அசையாச் சொத்துக்களுக்கு நியாய வாடகை நிர்ணயம் செய்யும்போது திருத்திய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதால் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்படுள்ளது.