மாஸ்கோ: ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதார தடையால், சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளதாக, அந்நாட்டின் விண்வெளி மையமான ரோஸ்கோஸ்மோஸ் அமைப்பின் தலைவர் டிமிட்ரி ரோகோஜின் கூறியுள்ளார்.
உக்ரைன் மீது நடத்தி வரும் தாக்குதல் காரணமாக, ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடையை விதித்துள்ளன.
இந்நிலையில் டிமிட்ரி ரோகோஜின் கூறியதாவது: சர்வதேச விண்வெளி நிலையம் சுற்றுவட்டப்பாதையில் சரியாக உள்ளதை (ஆண்டிற்கு சராசரியாக 11 முறை)யும், விண்வெளி குப்பைகளை தவிர்ப்பதையும் ரஷ்ய பிரிவு உறுதி செய்கிறது. மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடையால் சர்வதேச விண்வெளி மையம் கீழே விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தடைகளை நீக்க இந்த நாடுகள் முன்வர வேண்டும்.
சர்வதேச விண்வெளி நிலையத்தை பராமரிக்க தேவையான சாதனங்களை ரஷ்யா தான் கொடுக்கிறது. அவை தடைபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. அது பாதிக்கப்பட்டால், 500 டன் எடை கொண்ட விண்வெளி நிலையம் கடலிலோ அல்லது நிலத்திலோ விழுந்து சேதமடைய கூடும். இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 1ம் தேதி அமெரிக்காவின் நாசா அமைப்பு, சர்வதேச விண்வெளி நிலையத்தை ரஷ்யாவின் உதவி இல்லாமல் சுற்றுப்பாதையில் சரியாக வைத்திருக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறியிருந்தது.
Advertisement