தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைவரான சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஆலோசனை வழங்கியதாக கூறப்பட்ட இமயமலை சாமியார், அனந்த் சுப்பிரமணியன் தான் என சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பங்குச்சந்தையில் 2016ஆம் ஆண்டு வரை தலைமைப் பொறுப்பில் இருந்த சித்ரா ராமகிருஷ்ணா, சாமியார் ஒருவரின் ஆலோசனைகளை கேட்டு முக்கிய முடிவுகளை எடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.
மேலும், தனது ஆலோசகராக ஆனந்த் சுப்பிரமணியனை நியமித்ததில் விதிமீறல் உள்ளதாகவும் புகாரளிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில், ஆனந்த் சுப்ரமணியன், சித்ரா ஆகியோரை கைதுசெய்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஜாமீன்கோரி ஆனந்த் சுப்ரமணியன் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கின் விசாரணை முக்கிய கட்டத்தில் இருப்பதாகக் கூறி ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்த சிபிஐ தரப்பு, சாமியார் என்று யாரும் இல்லை என்றும் ஆனந்த் சுப்ரமணியன்தான் மின்னஞ்சல் அனுப்பியதாகவும் தெரிவித்தது