தாம் கைது செய்யப்பட்டபோது காவல்துறையினர் தம்மை சிறைக்கு அழைத்துச் செல்லாமல் அலைக்கழித்ததாகவும் சிறையில் கட்டில் இல்லாமல் தரையில் படுக்க நேர்ந்ததாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக பிரமுகரை தாக்கியது, போராட்டத்தில் ஈடுபட்டது ஆகிய வழக்குகளில் பிணை கிடைத்த நிலையில் நில அபகரிப்பு வழக்கிலும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றம் பிணை வழங்கியது. இதையடுத்து இன்று ஜெயக்குமார் விடுவிக்கப்பட்டார்.
அவரை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை பொறுத்துக்கொள்ள முடியாமல் பொய் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM