திருவனந்தபுரம்: கேரளாவில் இருந்து சில வருடங்களுக்கு முன் 30க்கும் மேற்பட்டோர் சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த நஜீப் (23) என்பவர் 5 வருடங்களுக்கு முன் ஆப்கானிஸ்தான் சென்றார். இவர் கடந்த 2017ம் ஆண்டு வேலூரில் உள்ள பிரபல பொறியியல் கல்லூரியில் எம்.டெக் படித்துக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். இது தொடர்பாக நடத்திய விசாரணையில் இவர் ஐதராபாத்தில் இருந்து துபாய் சென்று, பின்னர் அங்கிருந்து ஆப்கானிஸ்தானில் உள்ள கொராசான் பகுதிக்கு சென்றது தெரிந்தது. அதற்கு முன்னதாக இவர் ஈராக், சிரியா ஆகிய நாடுகளுக்கும் சென்றிருந்தார். இந்நிலையில், கொராசான் பகுதியில் நஜீப் மனித வெடிகுண்டாக மாறி, எதிர்தரப்பினர் மீது நடத்திய தாக்குதலில் பலியாகி விட்டதாக, ‘வாய்ஸ் ஆப் கொராசான்’ என்ற ஐஎஸ் இயக்கத்தின் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் இயக்கத்தின் மீது வேறொரு தீவிரவாத குழு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பழி வாங்கும் வகையில் நஜீப் தலைமையில் சிலர் தற்கொலை படை தாக்குதல் நடத்தி பலியாகி உள்ளனர். இந்த தாக்குதல் எங்கு, எப்போது நடந்தது என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. இது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணையை தொடங்கியுள்ளது.